தலைமைச் செயலகம் முன்பு செப்.24-ல் விவசாயிகள் முற்றுகைப் போராட்டம் அறிவிப்பு!

 
 தலைமை செயலகம்

தேர்தல் வாக்குறுதியின்படி முழு விவசாயக் கடன்களையும் தள்ளுபடி செய்ய வலியுறுத்தியும், நிபந்தனைகளுடன் கூடிய குறைவான தள்ளுபடி அறிவிப்பைக் கண்டித்தும் வரும் செப்டம்பர் 24-ஆம் தேதி சென்னை தலைமைச் செயலகம் முன்பு முற்றுகைப் போராட்டம் நடத்தப்படும் என 20-க்கும் மேற்பட்ட விவசாய சங்கங்கள் அறிவித்துள்ளன.

தமிழக விவசாயிகள் போராட்டம்

தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் தனது தேர்தல் அறிக்கையில் அளிக்கப்பட்ட வாக்குறுதியின்படி அனைத்து விவசாயக் கடன்களையும் முழுமையாகத் தள்ளுபடி செய்ய வேண்டும். மாறாக, தற்போது 17 நிபந்தனைகளுடன் ரூ.75,000 வரை மட்டுமே கடன் தள்ளுபடி செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளதை எதிர்த்து திருச்சியில் விவசாயிகள் ஏற்கனவே போராட்டத்தில் ஈடுபட்டனர்.

போராடும் விவசாயிகளை அடக்கும் நடவடிக்கைகளில் காவல்துறையினர் ஈடுபடுவதாகக் குற்றம்சாட்டப்பட்டுள்ள நிலையில், இதனைத் தீவிரப்படுத்தும் வகையில் அடுத்த கட்டப் போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.

விவசாயிகள் போராட்டம்

இதன் ஒரு பகுதியாக, வரும் செப்டம்பர் 24-ஆம் தேதி அன்று சென்னை தலைமைச் செயலகம் முன்பு 20-க்கும் மேற்பட்ட பல்வேறு விவசாய சங்கங்கள் இணைந்து பிரம்மாண்டமான முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட உள்ளதாகத் தமிழக ஏரி மற்றும் ஆற்று பாசன விவசாயிகள் சங்கத்தின் தலைவர் விஸ்வநாதன் அதிகாரப்பூர்வமாகத் தெரிவித்துள்ளார்.