காவிரியில் தண்ணீர் திறக்க வலியுறுத்தல்.. முக்கொம்பில் ஆற்றில் இறங்கி விவசாயிகள் போராட்டம்!

 
விவசாயிகள் காவிரி ஆற்றில் போராட்டம்

காவிரி ஆற்றில் தமிழகத்திற்குரிய தண்ணீரை உடனடியாகத் திறந்துவிடக் கோரி, திருச்சியில் விவசாயிகள் ஆற்றில் இறங்கியும் மணலில் புதைந்தும் போராட்டங்களில் ஈடுபட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உச்ச நீதிமன்றம் மற்றும் காவிரி நடுவர் மன்றத்தின் உத்தரவுகளின்படி, தமிழகத்திற்கு மாதந்தோறும் உரிய தண்ணீரைத் திறந்துவிடக் கர்நாடகா அரசும் மத்திய அரசும் நடவடிக்கை எடுக்கவில்லை என்று விவசாயிகள் குற்றம் சாட்டியுள்ளனர்.

ஜூன் மாதம் முதல் ஆகஸ்ட் மாதம் வரையிலான காலக்கட்டத்தில் தமிழகத்திற்கு வழங்க வேண்டிய 53 டி.எம்.சி. காவிரித் தண்ணீரை இதுவரை திறந்துவிடவில்லை. இதன் காரணமாகத் தமிழகத்தில் நிலத்தடி நீர்மட்டம் வேகமாகக் குறைந்து, பல்வேறு பகுதிகளில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் ஆபத்து உருவாகியுள்ளது.

காவிரி மேலாண்மை வாரியம் உடனடியாகத் தலையிட்டு தண்ணீரைத் திறக்க வலியுறுத்தி, தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத்தின் மாநிலத் தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் 30-க்கும் மேற்பட்ட விவசாயிகள் இப்போராட்டத்தில் ஈடுபட்டனர்.

திருச்சி முக்கொம்பு பகுதியில் காவிரி ஆற்றில் இடுப்பளவு தண்ணீரில் இறங்கிய விவசாயிகள், பின்னர் ஆற்றின் மையப்பகுதிக்குச் சென்று மணலில் தங்களைப் புதைத்துக் கொண்டு தங்களது கடுமையான கண்டனங்களைப் பதிவு செய்தனர்.

தகவலறிந்து வந்த வாத்தலை காவல்துறை ஆய்வாளர் சுகுணா தலைமையிலான காவல்துறையினர் நடத்திய பேச்சுவார்த்தையைத் தொடர்ந்து விவசாயிகள் போராட்டத்தைக் கைவிட்டுப் கலைந்து சென்றனர்.