விவசாய சங்கத் தலைவர்கள் வீட்டுக் காவலில் அடைத்து வைத்த போலீசார் - தவெக அரசு மீது கடும் குற்றச்சாட்டு!
முழுமையான பயிர்க்கடன் தள்ளுபடி உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி திருச்சியில் இன்று நடைபெறவிருந்த போராட்டத்தில் கலந்துகொள்ளச் செல்லவிருந்த விவசாய சங்கத் தலைவர்களைக் காவல்துறையினர் வீட்டுக் காவலில் அடைத்துள்ள சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அனைத்து விதமான பயிர்க்கடன்களையும் முழுமையாகத் தள்ளுபடி செய்ய வேண்டும் என்ற முக்கியக் கோரிக்கையை முன்வைத்துத் திருச்சியில் இன்று மாநில அளவிலான போராட்டம் ஒன்றுக்கு விவசாயச் சங்கங்கள் அழைப்பு விடுத்திருந்தன.
இந்தப் போராட்டத்தில் பங்கேற்பதற்காகச் சத்தியமங்கலத்தில் இருந்து புறப்படத் தயாராக இருந்த தமிழக காவிரி விவசாயிகள் சங்கத்தைச் சேர்ந்த பாட்ஷா ரவி, தங்க தருமராஜன் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகளைக் காவல்துறையினர் தடுத்து நிறுத்தி வீட்டுக் காவலில் அடைத்தனர்.
கடந்த 35 ஆண்டுகளில் இல்லாத அளவுக்குத் தற்போதைய தவெக அரசு தங்களுக்குப் பல்வேறு நெருக்கடிகளையும் ஒடுக்குமுறைகளையும் அளித்து வருவதாக விவசாய சங்கத் தலைவர்கள் வெளிப்படையாகக் குற்றம் சாட்டியுள்ளனர்.
