பணம் செலுத்தியும் ஏமாற்றம் - தட்கல் மின் இணைப்புக்காக 6 மாதங்களாகக் காத்திருக்கும் விவசாயிகள்!

 
மின் இணைப்பு விவசாயி மோட்டார் பம்புசெட் மின் இணைப்பு விவசாயி மோட்டார் பம்புசெட்

தமிழக மின்வாரியம் 2025-2026-ஆம் ஆண்டிற்கான விரைவு தட்கல் திட்டத்தின் கீழ், விவசாய உற்பத்தியைப் பெருக்கும் நோக்கில் 10,000 இலவச விவசாய மின் இணைப்புகள் வழங்கப்படும் என அறிவித்திருந்தது. இந்த திட்டத்தின் கீழ் முன்னுரிமை அடிப்படையில் மின் இணைப்புப் பெறலாம் என்பதால், தமிழகம் முழுவதும் உள்ள ஆயிரக்கணக்கான விவசாயிகள் லட்சக்கணக்கில் பணம் செலுத்தி மின்வாரியத்தில் விண்ணப்பித்தனர். ஆனால், பணம் செலுத்தி 6 மாதங்கள் கடந்த நிலையிலும் திருச்சி மாவட்டத்தில் பெரும்பாலான விவசாயிகளுக்கு இன்னும் மின் இணைப்பு வழங்கப்படாதது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பயிர்கள் விவசாயி புல் அரிசி வயல்

திருச்சி மாவட்டத்தில் இத்திட்டத்தின் கீழ் மின் இணைப்பு கோரி விண்ணப்பித்த விவசாயிகள்,  தட்கல் திட்டத்தின் கீழ் முழுத் தொகையையும் செலுத்தி 367 விவசாயிகள் விண்ணப்பித்திருந்தனர். விண்ணப்பித்தவர்களில் வெறும் 83 விவசாயிகளுக்கு மட்டுமே இதுவரை மின்வாரியம் சார்பில் மின் இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளன.

வட்டிக்குக் கடன் வாங்கியும், நகைகளை அடகு வைத்தும் லட்சக்கணக்கில் பணம் செலுத்திய மீதமுள்ள 284 விவசாயிகள், 6 மாதங்களாகியும் மின் இணைப்பு கிடைக்காமல் தவித்து வருகின்றனர்.

விவசாயி பயிர்க்கடன் தள்ளுபடி நிதியுதவி

பணம் செலுத்தியும் மின் இணைப்பு வழங்கப்படாமல் தாமதமாவது குறித்துப் பாதிக்கப்பட்ட விவசாயிகள் தரப்பில் மின்வாரிய உயர் அதிகாரிகளிடம் முறையிடப்பட்டது. இதனைத் தொடர்ந்து, மின் கம்பங்கள் மற்றும் மின் மாற்றிகள் தட்டுப்பாடு போன்ற தொழில்நுட்பக் காரணங்களால் இந்த தாமதம் ஏற்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ள மின்வாரிய அதிகாரிகள், நிலுவையில் உள்ள மீதமுள்ள 284 விவசாயிகளுக்கும் முன்னுரிமை அடிப்படையில் விரைந்து மின் இணைப்பு வழங்கத் தேவையான மாற்று நடவடிக்கைகளைத் தீவிரமாக மேற்கொண்டு வருவதாகத் தெரிவித்துள்ளனர்.