பெட்ரோல் பங்கில் பாஸ்ட் புட் கடை உரிமையாளர் வெட்டிக் கொலை - போலீசார் விசாரணை!
செங்கல்பட்டு அருகே பெட்ரோல் போட வந்த பாஸ்ட் புட் கடை உரிமையாளரை மர்ம கும்பல் ஒன்று வழிமறித்துச் சரமாரியாக வெட்டிக் படுகொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
செங்கல்பட்டு சிங்கபெருமாள் கோவில் பகுதியைச் சேர்ந்தவர் வீரா என்ற வீரமுத்துகிருஷ்ணன் (26). இவர் அப்பகுதியில் பாஸ்ட் புட் கடை நடத்தி வருகிறார். கொலை வழக்கு ஒன்றில் நீதிமன்றத்தில் ஆஜராகி கையெழுத்திட்டுவிட்டு வீடு திரும்பிய இவர், திருச்சி - சென்னை பைபாஸ் சாலையில் உள்ள பெட்ரோல் பங்க் ஒன்றில் எரிபொருள் நிரப்புவதற்காக இருசக்கர வாகனத்தை நிறுத்தியுள்ளார்.

அப்போது இரண்டு மோட்டார் சைக்கிள்களில் வந்த 6 பேர் கொண்ட மர்ம கும்பல் திடீரென வீரமுத்துகிருஷ்ணனை வழிமறித்து, தாங்கள் மறைத்து வைத்திருந்த ஆயுதங்களால் சரமாரியாக வெட்டிவிட்டுத் தப்பியோடியது. இதில் பலத்த காயமடைந்து ரத்த வெள்ளத்தில் சரிந்த அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
கடந்த 6 மாதங்களுக்கு முன்பு சிங்கபெருமாள் கோவில் தெருவைச் சேர்ந்த ஆகாஷ் என்பவர் வெட்டிக் கொல்லப்பட்ட வழக்கில் வீரமுத்துகிருஷ்ணன் முக்கியக் குற்றவாளியாக இருந்ததாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. இதன் காரணமாக முந்தைய முன்விரோதம் மற்றும் பழிவாங்கும் நோக்கில் இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டிருக்கலாம் என்ற கோணத்தில் செங்கல்பட்டு காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
