கந்த சஷ்டி 2ம் நாள் விரதம்... வறுமை நீங்கி செல்வ வளம் பெருக வழிபட வேண்டிய முறைகள்!
முருகப்பெருமானின் அருளைப் பெற உகந்த கந்த சஷ்டி விரதத்தின் இரண்டாம் நாள் வழிபாடு இன்று கோலாகலமாகத் தொடங்குகிறது. குழந்தை பாக்கியம், வறுமை நீக்கம் மற்றும் மன அமைதி பெற வேண்டி பக்தர்கள் விரதத்தை மேற்கொண்டு வருகின்றனர்.
முதல் நாளில் எந்த முறையில் விரதத்தைத் தொடங்கினீர்களோ, அதே தூய்மையோடும் பக்தியோடும் இரண்டாம் நாளும் விரதத்தைத் தொடர வேண்டும். அதிகாலையிலேயே நீராடி, நெற்றிக்கு திருநீறு, சந்தனம் மற்றும் குங்குமம் இட்டுக்கொள்ள வேண்டும். பூஜை அறையில் விளக்கேற்றி விநாயகரையும் குலதெய்வத்தையும் மனதார வேண்டிக்கொள்ள வேண்டும். வீட்டில் உள்ள முருகன் படம் அல்லது விக்ரகத்திற்குச் சந்தனம், குங்குமம், பூக்கள் கொண்டு அலங்கரித்து நறுமணப் புகையிட்டுத் தீபம் ஏற்ற வேண்டும்.
கந்த சஷ்டி விரதத்தின் இரண்டாம் நாளில் காலை மற்றும் மாலை ஆகிய இரு வேளைகளிலும் ஷட்கோண தீபம் ஏற்றுவது சிறப்பானது. முதல் நாளில் "ச" என்ற எழுத்தின் மீது நெய் தீபம் ஏற்றியது போல, இரண்டாம் நாளில் "ர" என்ற எழுத்தின் மீதும் தீபம் ஏற்ற வேண்டும். அதாவது, "ச" மற்றும் "ர" ஆகிய இரண்டு எழுத்துக்களின் மீதும் தீபங்கள் ஒளிர வேண்டும்.

முருகப்பெருமானுக்குப் பல வகையான கலவை சாதங்களில் ஏதேனும் ஒன்றையோ அல்லது ஏதேனும் ஒரு பழத்தையோ காலை, மாலை இரு வேளையும் நைவேத்தியமாகப் படைத்து வழிபடலாம். எளிய பாலும் பழமும் கூட முருகனுக்கு உகந்த நைவேத்தியமாகும்.
இரண்டாம் நாளில் வறுமை நீங்கி, நிதி நிலை உயர அருணகிரிநாதர் இயற்றிய திருவண்ணாமலை தலத்திற்குரிய திருப்புகழையும், கந்தர் அனுபூதி பாடலையும் பாடி முருகப்பெருமானை வழிபட வேண்டும்.
வறுமை நீக்கும் திருப்புகழ்:
"சிவமா துடனே அநுபோ கமதாய்...
சிவஞா னமுதே பசியாறி...
...கடையேன் மிடிதூள் பட நோய் விடவே
கனல்மால் வரைசேர் பெருமாளே."

செல்வ வளம் தரும் கந்தர் அனுபூதி பாடல்:
"வடிவும் தனமும் மனமும் குணமும்
குடியும் குலமும் குடிபோ கியவா
அடி அந்தம் இலா அயில் வேல் அரசே
மிடி என்று ஒரு பாவி வெளிப்படினே."
தினமும் காலை, மாலை வேளைகளில் கந்த சஷ்டி கவசம், கந்த குரு கவசம் மற்றும் கந்தர் அனுபூதி ஆகியவற்றைப் படித்தோ அல்லது கேட்டோ முழு மனதோடு முருகனை வழிபட வேண்டும். 48 நாட்களுக்குத் தொடர்ந்து வீட்டில் ஷட்கோண தீபம் ஏற்றி இந்த பாடல்களைப் பாடி வந்தால் வறுமை நீங்கிப் பொருளாதாரம் மேம்படும் என்பது நம்பிக்கையாகும்.
