சென்னையில் இடி, மின்னல் தாக்கி தந்தை, 9 வயது மகன் உயிரிழப்பு!

 
இடி மின்னல்

சென்னை படப்பை அருகே பெய்த கனமழையின் போது இடி, மின்னல் தாக்கியதில் மீன் வியாபாரியான தந்தையும் அவரது 9 வயது மகனும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த சோகச் சம்பவம் நடந்துள்ளது.

படப்பை அருகே உள்ள வடமேல்பாக்கம் பகுதியைச் சேர்ந்தவர் சங்கர் (47). இவர் மீன் வியாபாரம் செய்து வந்தார். இவரது மகன் சந்திரன் (9) அந்த பகுதியில் இருந்த அரசுப் பள்ளி ஒன்றில் படித்து வந்தான்.

மின்னல்

இந்நிலையில் நேற்று மாலை அப்பகுதியில் இடி, மின்னலுடன் கூடிய கனமழை பெய்துள்ளது. இதனால், சங்கர் தனது மகனைப் பள்ளியிலிருந்து அழைத்துக் கொண்டு வடமேல்பாக்கம் ஏரிக்கரை வழியாக வீட்டிற்கு நடந்து சென்று கொண்டிருந்துள்ளார்.

ஏரிக்கரை வழியே வந்து கொண்டிருந்த போது எதிர்பாராதவிதமாக அவர்கள் மீது பயங்கர இடி, மின்னல் தாக்கியது. இதில் இருவருமே பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.

இடி மின்னல்

அவ்வழியாகச் சென்றவர்கள் இருவரது உடல்களையும் பார்த்து, காவல்துறையினருக்கு தகவல் அளித்ததன்பேரில், சம்பவ இடத்திற்கு வந்த படப்பை காவல்துறையினர் இருவரது உடல்களையும் கைப்பற்றினர். பிரேதப் பரிசோதனைக்காக உடல்கள் தாம்பரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டு, வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.