ஐபிஎல் 2027 ஏலத்தில் பெயர் பதிவு செய்த அப்பா - மகன்!

 
ஐபிஎல் அப்பா – மகன் ஆப்கானிஸ்தான் முகமது நபி மற்றும் ஹசன் ஈசாகில்!

கோவாவில் வரும் டிசம்பர் 16-ஆம் தேதி நடைபெறவுள்ள 2027-ஆம் ஆண்டு ஐபிஎல் மினி ஏலத்தில், ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணியின் மூத்த ஆல்-ரவுண்டர் முகமது நபி மற்றும் அவரது மகன் ஹசன் ஈசாகில் ஆகியோர் தங்களது பெயர்களைப் பதிவு செய்துள்ளனர். தந்தை மற்றும் மகன் ஆகிய இருவரும் ஒரே ஐபிஎல் ஏலத்தில் களம் காண்பது கிரிக்கெட் உலகில் தனித்துவமான கவனத்தையும் எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

2009-ஆம் ஆண்டு ஆப்கானிஸ்தான் அணிக்காகச் சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகமான 41 வயதான முகமது நபி, 3 டெஸ்ட், 181 ஒருநாள் மற்றும் 155 டி20 சர்வதேசப் போட்டிகளில் விளையாடிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல் தொடரில் 2017 முதல் 2024 வரை சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகளுக்காக விளையாடியுள்ள அவர், நடப்பு மினி ஏலத்தில் ரூ.1 கோடி அடிப்படை விலையில் பதிவு செய்துள்ளார்.

ஐபிஎல் 2026

முகமது நபியின் 20 வயது மகனான ஹசன் ஈசாகில், கடந்த செப்டம்பர் 2026-இல் ஆசிய விளையாட்டுப் போட்டிகள் மூலம் ஆப்கானிஸ்தான் அணிக்காகச் சர்வதேச அரங்கில் அறிமுகமான இளம் பேட்டர் ஆவார். முதல் முறையாக ஐபிஎல் ஏலத்தில் இணையும் அவர், ரூ.75 லட்சம் அடிப்படை விலையில் பெயர் பதிவு செய்துள்ளார்.

தந்தைக்கும் மகனுக்கும் இடையே 21 வயது வித்தியாசம் உள்ள நிலையில், அனுபவமிக்க ஆல்-ரவுண்டர் மற்றும் இளம் பேட்டர் என இரு வேறு பரிமாணங்களில் இந்த ஏலம் அமைந்துள்ளது.

ஐபிஎல் ஏலம்

ஐபிஎல் 2027 ஏலத்திற்காக மொத்தம் 1,220 வீரர்கள் பெயர் பதிவு செய்துள்ள நிலையில், அணிகள் சுருக்கப் பட்டியலிடும் நடைமுறைக்குப் பிறகே இறுதி ஏலப் பட்டியல் வெளியிடப்படும். இறுதிப் பட்டியலில் இருவரும் இடம்பெற்று, ஒரே அணியிலோ அல்லது எதிர் அணிகளிலோ விளையாடும் வாய்ப்பு கிடைக்குமா என ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துள்ளனர்.