சொந்த மகனை போலீசில் பிடித்துக் கொடுத்த தந்தை... ரூ.50 லட்சம் திருடி காதலிக்கு ஐபோன் வாங்கிக் கொடுத்தது அம்பலம்!
அசாம் மாநிலத்தில் தனது சொந்த வீட்டிலேயே ரூ. 50 லட்சம் மதிப்புள்ள பணம் மற்றும் தங்க நகைகளைத் திருடி, காதலிக்கு ஐபோன் உள்ளிட்ட ஆடம்பரப் பரிசுகளை வாங்கிக் கொடுத்த வாலிபரை அவரது தந்தையே அஸ்ஸாம் காவல்துறையிடம் ஒப்படைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அசாம் மாநிலத்தைச் சேர்ந்த அந்த வாலிபர், தனது சொந்த வீட்டில் வைத்திருந்த ரூ. 50 லட்சம் மதிப்பிலான ரொக்கம் மற்றும் நகைகளைத் திருடிக் கொண்டு யாருக்கும் தெரியாமல் தலைமறைவானார். வீட்டில் பணம், நகை காணாமல் போனது குறித்து அதிர்ச்சியடைந்த தந்தை, மகனின் செல்போன் எண்ணை வைத்து அவர் குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் தங்கியிருப்பதை அறிந்தார்.

மகனைத் தேடி உடனடியாக அகமதாபாத்திற்கு நேரில் சென்ற தந்தை, அங்கு சொகுசு வாழ்க்கை வாழ்ந்து வந்த மகனைப் பிடித்து மீண்டும் அசாமிற்கு அழைத்து வந்தார். விசாரணையில், திருடிய பணத்தில் தனது காதலிக்கு விலை உயர்ந்த ஐபோன் மற்றும் பல ஆடம்பரப் பரிசுகளை அவர் வாங்கிக் கொடுத்தது தெரியவந்தது.
மகனின் தவறான செயலை நியாயப்படுத்தாத தந்தை, அவரை உடனடியாகக் காவல் நிலையத்தில் ஒப்படைத்து புகார் அளித்தார். இது குறித்து தந்தை அளித்தப் புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் வாலிபரைக் கைது செய்து, திருடப்பட்ட பணம் மற்றும் நகைகளை மீட்கும் தீவிர விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்.
