சாதி மாறி காதல் திருமணம் - உயிருடன் இருக்கும் மகளுக்கு இறுதிச்சடங்கு செய்த தந்தை!

 
இறுதிசடங்கு காதல் திருமணம்

உத்தரப் பிரதேசத்தில் பெற்றோரின் எதிர்ப்பை மீறிச் சாதி மாறித் திருமணம் செய்துகொண்ட தன் மகளுக்கு, அவர் உயிருடன் இருக்கும்போதே தந்தை இறுதிச்சடங்கு செய்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

உத்தரப் பிரதேச மாநிலம் சந்தோலி மாவட்டம் ஜக்தீஷ்ராய் கிராமத்தைச் சேர்ந்த விவசாயி பிரகாஷ் சிங்கின் மகள் நேஹா சிங் (20). அதே பகுதியைச் சேர்ந்த வேறு சாதியைச் சேர்ந்த சாவன் (24) என்பவரைக் காதலித்து வந்துள்ளார். இவர்களின் காதலுக்குப் பெண் தரப்பில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.

பெற்றோரின் எதிர்ப்பை மீறி வீட்டை விட்டு வெளியேறிய நேஹா மற்றும் சாவன் ஜோடி, பதிவுத் திருமணம் செய்துகொண்டு சோன்பத்ரா நகரில் வாடகை வீட்டில் குடியேறினர். மகளை மீண்டும் வீட்டிற்கு அழைத்து வரப் பெற்றோர் முயன்றபோதிலும், நேஹா தனது கணவருடன் தான் வாழ்வேன் என்பதில் உறுதியாக இருந்துள்ளார்.

கல்யாணம்

மகளின் இந்த முடிவால் கடும் மனஉளைச்சலுக்கு ஆளான தந்தை பிரகாஷ் சிங், தன் மகள் உயிரிழந்துவிட்டதாகக் கருதி அவருக்குரிய இறுதிச்சடங்குகளைச் செய்துள்ளார். "பிள்ளைகள் தாங்கள் எடுக்கும் முக்கிய முடிவுகளில் பெற்றோரை மதிக்க வேண்டும்; எங்கள் விருப்பத்திற்கு மாறாகத் திருமணம் செய்துகொண்டதால் அவளுக்கு இறுதிச்சடங்கு செய்துவிட்டேன்" என்று அவர் தெரிவித்துள்ளார்.

தந்தையின் இந்த விபரீத முடிவுக்கு ஆதரவு தெரிவித்துள்ள பிரகாஷ் சிங்கின் தம்பி, மகளை ஆண் பிள்ளை போல் வளர்த்துப் படிக்க வைத்ததாகவும், தங்கள் சாதியை விட்டு வேறு சாதியில் திருமணம் செய்துகொண்டது குடும்பத்தினருக்குப் பெருத்த அவமானத்தை ஏற்படுத்தியுள்ளதாகவும் கூறியுள்ளார்.