பிறந்து 14 நாட்களே ஆன பெண் குழந்தையைத் தண்ணீர் தொட்டியில் வீசிக் கொன்ற தந்தை!
கர்நாடக மாநிலம் சிக்கபல்லாபூரில், இரண்டாவதாகவும் பெண் குழந்தை பிறந்ததால் ஆத்திரமடைந்த தந்தை, 14 நாட்களே ஆன பச்சிளம் பெண் குழந்தையைத் தண்ணீர் தொட்டியில் வீசிக் கொன்ற சோகச் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கர்நாடக மாநிலம் சிக்கபல்லாபூர் சாந்திநகர் பகுதியைச் சேர்ந்தவர் இம்ரான். இவருக்கு ஏற்கனவே 4 வயதில் ஒரு பெண் குழந்தை உள்ளது. இம்ரானின் மனைவிக்குச் சமீபத்தில் இரண்டாவதாக மீண்டும் ஒரு பெண் குழந்தை பிறந்துள்ளது.

ஏற்கனவே பெண் குழந்தை உள்ள நிலையில், இரண்டாவதாகவும் பெண் குழந்தையே பிறந்ததால் இம்ரான் தீவிர அதிருப்தியிலும் ஆத்திரத்திலும் இருந்து வந்ததாகக் கூறப்படுகிறது.
குடும்பத்தினர் அனைவரும் அசந்து தூங்கிக் கொண்டிருந்த நள்ளிரவு நேரத்தில் இந்தத் துயரச் சம்பவம் நிகழ்ந்துள்ளது: வீட்டின் உறுப்பினர்கள் உறங்கிக் கொண்டிருந்த சமயத்தைப் பயன்படுத்திய இம்ரான், பிறந்து 14 நாட்களே ஆன தனது பச்சிளம் குழந்தையைத் தூக்கிச் சென்று தண்ணீர் தொட்டியில் வீசிக் கொடூரமாகக் கொலை செய்துள்ளார்.

காலையில் குழந்தை காணாமல் போனதைக் கண்டு அதிர்ச்சியடைந்த தாய், கணவர் மீது சந்தேகம் கொண்டு காவல் நிலையத்தில் புகார் அளித்தார். மனைவியின் புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்த காவல் துறையினர், இம்ரானை அதிரடியாகக் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
