10 வயது மகன் தந்தை மீது வழக்கு... நீதிமன்றம் கொடுத்த அதிரடி தீர்ப்பு!
போற போக்கப் பார்த்தால் சீக்கிரத்தில் நம்மூரிலும் இப்படியெல்லாம் நடக்க ஆரம்பிச்சுடும் போல. 10 வயது சிறுவன் ஒருவன், தனது தந்தை மீது நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்த சம்பவம் சீனாவில் அரங்கேறியுள்ளது. இந்த விசித்திரமான வழக்கின் பின்னணி மற்றும் நீதிமன்றத்தின் தீர்ப்பு குறித்த விவரங்கள் சர்வதேச அளவில் கவனத்தை ஈர்த்து, சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

சீன கலாச்சாரத்தின்படி, 'சந்திர புத்தாண்டு' (சீன புது வருட பிறப்பு) கொண்டாட்டத்தின் போது பெரியவர்கள் குழந்தைகளுக்குச் சிவப்பு நிற உறையில் வைத்துப் பணம் வழங்குவது வழக்கம். இப்படி 10 வயது சிறுவன் ஒருவனுக்கு அவனது உறவினர்கள் மற்றும் பெரியவர்கள் புத்தாண்டு பரிசாகச் சுமார் 80 ஆயிரம் யுவான் (இந்திய மதிப்பில் சுமார் 11 லட்சம் ரூபாய்) வழங்கியுள்ளனர். சிறுவனின் பெற்றோர் விவாகரத்து பெற்றுப் பிரிந்து வாழ்கின்றனர். சிறுவன் தனது தந்தையுடன் வசித்து வருகிறார். இந்நிலையில் மகனின் வங்கிக் கணக்கில் இருந்த இந்தப் பணத்தைத் தந்தை தனது இரண்டாவது திருமணச் செலவுக்காகப் பயன்படுத்தியதாகத் தெரிகிறது. தனது பணத்தைத் தந்தை தன்னிடம் கேட்காமல் எடுத்துக்கொண்டதைக் கண்டித்து, அந்தச் சிறுவன் நீதிமன்றத்தை அணுகினான்.

இந்த வழக்கை விசாரித்த சீன நீதிமன்றம், பெற்றோர் விவாகரத்து பெற்றிருந்தாலும் குழந்தைகளின் சொத்துக்கள் அல்லது அவர்கள் பெறும் பரிசுப் பணத்தின் மீது அவர்களுக்கு மட்டுமே முழு உரிமை உண்டு என்று தெரிவித்தது. மேலும், தந்தை பயன்படுத்திய அந்த 80 ஆயிரம் யுவான் தொகையையும் உடனடியாக அந்தச் சிறுவனுக்குத் திருப்பித் தர வேண்டும் என்று உத்தரவிட்டது.
பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளின் பணத்தைச் சொந்தச் செலவுகளுக்காகப் பயன்படுத்தக் கூடாது என்பதை இந்தத் தீர்ப்பு உறுதிப்படுத்தியுள்ளது. சமூக வலைதளங்களில் பலரும் இந்தச் சிறுவனின் துணிச்சலான முடிவைப் பாராட்டி வருகின்றனர்.
