காஸ் சிலிண்டர் பதுக்கி, ரூ.7,000க்கு விற்ற தந்தை, மகன் கைது... 40 சிலிண்டர்கள் பறிமுதல்!
சென்னை திருவான்மியூர் சித்திரை குளத் தெருவில் உள்ள ஒரு வீட்டில், வீட்டு உபயோக மற்றும் வணிகப் பயன்பாட்டு காஸ் சிலிண்டர்களை சட்டவிரோதமாகப் பதுக்கி வைத்து அதிக விலைக்கு விற்பனை செய்வதாக போலீசாருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. இந்தத் தகவலின் பேரில் நேற்று மாலை திருவான்மியூர் போலீசார் குறிப்பிட்ட வீட்டில் அதிரடி சோதனை நடத்தினர். அப்போது அங்கு பதுக்கி வைக்கப்பட்டிருந்த 40 சிலிண்டர்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.

இது தொடர்பாக அந்த வீட்டில் வசித்து வந்த நீலமேகம் (80) மற்றும் அவரது மகன் குமார் (41) ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில், இவர்கள் இருவரும் சிலிண்டர்களைப் பதுக்கி வைத்து, வீட்டு உபயோக சிலிண்டரை 3 ஆயிரம் ரூபாய்க்கும், வணிகப் பயன்பாட்டு சிலிண்டரை 6 ஆயிரம் முதல் 7 ஆயிரம் ரூபாய் வரையிலும் கூடுதல் விலைக்கு விற்று வந்தது அம்பலமானது.

பொதுமக்களின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் வகையில் குடியிருப்புப் பகுதியில் சிலிண்டர்களைப் பதுக்கியது மற்றும் கறுப்புச் சந்தையில் விற்பனை செய்தது தொடர்பாக அவர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. பிடிபட்ட தந்தை மற்றும் மகனிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். அனுமதியின்றி சிலிண்டர்களைப் பதுக்கி வைப்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
