நடுக்கடலில் எதிரெதிர் கப்பல்களில் கேப்டன்களாக தந்தை-மகன்! நம்ப முடியாத அபூர்வ சந்திப்பு
மும்பையைச் சேர்ந்த இந்திய கடல் கேப்டன் ஒருவர் வட அட்லாண்டிக் பெருங்கடலில் தனது கப்பலில் பயணித்துக் கொண்டிருந்தபோது, எதிரே வந்த பிரம்மாண்ட கப்பலை கவனித்துள்ளார். வழக்கமாக இதுபோன்ற நேரங்களில் கப்பலின் வழித்தடம் உள்ளிட்ட விவரங்களை கடல்சார் வரைபடம் மற்றும் ரேடார் மூலம் கேப்டன்கள் கண்காணிப்பது வழக்கம்.அவ்வாறு எதிரே வந்த கப்பலின் விவரங்களை ருஷீல் சரண் சோதித்தபோது, அவருக்கு இன்ப அதிர்ச்சி காத்திருந்தது. அந்தக் கப்பலில் கேப்டனாக இருந்தது அவரது தந்தை ரவிராஜ் என்பது தெரியவந்தது.தந்தையும் மகனும் ஒரே கப்பலில் பயணிக்கவில்லை. இருவரும் தனித்தனி கப்பல்களில், எதிரெதிர் திசைகளில் பயணித்துக் கொண்டிருந்தனர். ருஷீலின் கப்பல் வடக்கு நோக்கிச் சென்ற நிலையில், அவரது தந்தையின் கப்பல் தெற்கு நோக்கி வந்து கொண்டிருந்தது.
இரு கப்பல்களும் அருகருகே கடந்து சென்றபோது, தந்தையும் மகனும் தங்கள் கப்பல்களின் டெக் பகுதிக்கு வந்து ஒருவரை ஒருவர் பார்த்து கைகளை அசைத்து மகிழ்ச்சியைப் பகிர்ந்து கொண்டனர். கடலின் நடுவே எதிர்பாராதவிதமாக நிகழ்ந்த இந்த சந்திப்பு இருவருக்கும் மறக்க முடியாத தருணமாக அமைந்தது.
இந்த அபூர்வ நிகழ்வை ருஷீல் சரண் தனது Instagram பக்கத்தில் வீடியோவாக பகிர்ந்துள்ளார். அதில், தந்தையுடன் நடுக்கடலில் சந்தித்ததை “நூறு கோடியில் ஒரு வாய்ப்பு” என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.இந்த சந்திப்பைத் தொடர்ந்து அவரது தந்தை ரவிராஜும் நெகிழ்ச்சியான கருத்தை பதிவிட்டுள்ளார். இருவரும் வெவ்வேறு திசைகளில் பயணித்தாலும் ஒரே கடல் வாழ்க்கையை பகிர்ந்து கொள்வதாகவும், தனது மகன் சக கேப்டனாக வளர்ந்து நிற்பதைப் பார்த்து பெருமைப்படுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
ஆயிரக்கணக்கான மைல்கள் பரந்து விரிந்த கடலில், தனித்தனி கப்பல்களில் பயணித்த தந்தையும் மகனும் தற்செயலாக எதிரெதிரே சந்தித்துக் கொண்ட இந்த நிகழ்வு சமூக வலைதளங்களில் கவனம் பெற்றுள்ளது. கடல் வாழ்க்கையின் எதிர்பாராத தருணங்களில் ஒன்றாக இந்த தந்தை-மகன் சந்திப்பு அமைந்துள்ளது.
