வீட்டுக்குள்ளே வராதே ... உயிர் பிரியும் நேரத்திலும் மகளைக் காத்த தந்தை!

 
குஜராத் குஜராத்

குஜராத் மாநிலம் காந்திநகரின் குடாசன் பகுதியில் வசித்து வந்த 42 வயதுடைய பங்கஜ் பன்சாலி என்பவர், கடந்த 5 மாதங்களுக்கு முன்பு தனது வேலையை இழந்துள்ளார். இதன் காரணமாக கடுமையான நிதி நெருக்கடி மற்றும் கடன் தொல்லைகளால் அவர் தீவிர மன உளைச்சலில் இருந்து வந்துள்ளார். இந்த நிலையில் சம்பவத்தன்று வீட்டில் யாரும் இல்லாத நேரத்தைப் பயன்படுத்திக் கொண்ட அவர், தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்துள்ளார்.

அப்போது வீட்டிற்கு வரும் தனது மகள் மான்வி தற்கொலை காட்சியைப் பார்த்துப் பாதிக்கப்படக் கூடாது என்று அவர் நினைத்துள்ளார். இதற்காகத் தனது உயிர் பிரியும் கடைசி நிமிடத்திலும் மகளின் நலனைக் கருத்தில் கொண்டு, வீட்டின் வெளிக்கதவில் ஒரு எச்சரிக்கைக் குறிப்பை ஒட்டியுள்ளார். அதில் தனது மகள் வீட்டிற்குள் நேரடியாக வர வேண்டாம் என்றும், பாதுகாப்புடன் இருக்க வேண்டும் என்றும் அவர் உருக்கமாகக் குறிப்பிட்டிருந்தார்.

கடந்த மே 22 முதல் பங்கஜின் கைபேசி அணைக்கப்பட்டு இருந்ததால் சந்தேகமடைந்த உறவினர்கள், மே 27 அன்று அவரது வீட்டிற்கு வந்துள்ளனர். அப்போது கதவில் ஒட்டப்பட்டிருந்த எச்சரிக்கைக் குறிப்பைக் கண்டு அதிர்ச்சியடைந்து உடனடியாக போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் வீட்டைத் திறந்து சோதனை செய்தபோது பங்கஜ் உயிரிழந்து கிடந்தது உறுதி செய்யப்பட்டது. இச்சம்பவம் குறித்து குஜராத் போலீசார் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.