மாமியாருடன் கள்ளத்தொடர்பைக் கண்டித்த மாமனார் அடித்துக் கொலை.. மருமகன், மகள் கைது!
தெலங்கானாவில் குடும்ப உறவுகளை உலுக்கும் வகையிலான ஒரு கொடூரக் கொலைச் சம்பவம் அரங்கேறியுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தெலங்கானா மாநிலம் ஆவஞ்சா கிராமத்தைச் சேர்ந்த யாதய்யா என்பவரது குடும்பத்தில் ஏற்பட்ட தகாத உறவு விவகாரம் கொலையில் முடிந்துள்ளது. யாதய்யாவின் மனைவி அலிவேலுவுக்கும், அவரது மருமகன் ஆஞ்சநேயலுவுக்கும் இடையே கடந்த சில காலமாகவே கள்ளத்தொடர்பு இருந்து வந்ததாகக் கூறப்படுகிறது. இந்த விவகாரம் குடும்பத்தினருக்குத் தெரியவந்ததைத் தொடர்ந்து, கணவர் யாதய்யா தனது மனைவியையும் மருமகனையும் கடுமையாகக் கண்டித்துள்ளார்.
இதனால் தங்களின் கள்ளத்தொடர்புக்கு யாதய்யா இடையூறாக இருப்பதாகக் கருதிய மனைவி அலிவேலு மற்றும் மருமகன் ஆஞ்சநேயலு ஆகியோர் அவரைத் தீர்த்துக்கட்ட முடிவு செய்தனர். இதற்குச் சான்றாக, யாதய்யாவின் சொந்த மகள் பத்மாவும் தங்களின் தாய்க்கும் கணவனுக்கும் உள்ள இந்தத் தகாத உறவை மறைக்கவும், தந்தையைக் கொலை செய்யவும் உடந்தையாக இருந்துள்ளார்.

திட்டமிட்டபடி மூன்று பேரும் சேர்ந்து யாதய்யாவைத் தனியாகப் பிடித்துக் கொடூரமாகத் தாக்கியுள்ளனர். யாதய்யாவின் அந்தரங்க உறுப்பில் பலமாகத் தாக்கியதுடன், அவரது கழுத்தையும் நெரித்துக் கொடூரமாகக் கொலை செய்துள்ளனர்.
குடும்பத் தலைவர் யாதய்யா மர்மமான முறையில் இறந்து கிடந்ததைக் கண்டு சந்தேகமடைந்த அக்கம் பக்கத்தினர் உடனடியாகக் காவல் துறையினருக்குத் தகவல் கொடுத்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், யாதய்யாவின் உடலைக் கைப்பற்றிப் பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பியதில் அவர் படுகொலை செய்யப்பட்டது உறுதி செய்யப்பட்டது.
இதனைத் தொடர்ந்து நடத்தப்பட்ட தீவிர விசாரணையில், கள்ளத்தொடர்பு காரணமாக மனைவி, மகள் மற்றும் மருமகன் ஆகிய மூவரும் இணைந்து இக்கொடூரத்தைச் செய்தது வெட்டவெளிச்சமானது. போலீசார் வழக்குப்பதிவு செய்து மூன்று பேரையும் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். பெற்ற மகளே தந்தையின் கொலைக்கு உடந்தையாக இருந்த இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
