கிணற்றில் விழுந்த கன்றுக்குட்டியைக் காப்பாற்றிய தந்தை - மகன் பலியான சோகம்!

 
தந்தை மகன் தந்தை மகன்

தெலுங்கானா மாநிலம் முலுகு மாவட்டத்தில் உள்ள கர்லபள்ளி கிராமத்தைச் சேர்ந்தவர் 41 வயதுடைய ராஜு. விவசாயியான இவருக்குச் சொந்தமான ஒரு இளங் கன்றுக்குட்டி, நேற்று தற்செயலாகப் பக்கத்து வீட்டு வளாகத்தில் இருந்த ஒரு ஆழமான விவசாயக் கிணற்றுக்குள் கால் தவறி விழுந்து தத்தளித்தது. கன்றுக்குட்டி கிணற்றுக்குள் விழுந்து உயிருக்குப் போராடுவதைக் கண்டு பதற்றமடைந்த ராஜு, அதனை எப்படியாவது காப்பாற்ற வேண்டும் என்ற நோக்கில் கிணற்றுக்குள் தண்ணீர் இறைப்பதற்காகப் பொருத்தப்பட்டிருந்த மோட்டார் குழாயின் உதவியோடு மெல்லக் கிணற்றுக்குள் இறங்கினார்.

திருத்துறைப்பூண்டி அருகே குளத்தில் மூழ்கி அண்ணன்-தம்பி உயிரிழந்த சோகம்.

அவர் கிணற்றின் ஆழத்திற்குச் சென்று தண்ணீரில் தத்தளித்துக் கொண்டிருந்த கன்றுக்குட்டியை ஒரு வலுவான கயிற்றால் பத்திரமாகக் கட்டினார். அப்போது கிணற்றுக்கு மேலே நின்றுகொண்டிருந்த அவரது 22 வயதுடைய மகன் பவன்குமார், கயிற்றை மிகக் கவனமாக மேலே இழுத்துக் கன்றுக்குட்டியை எவ்விதக் காயமுமின்றிப் பத்திரமாக வெளியே கொண்டு வந்து காப்பாற்றினார். அதன் பிறகு கிணற்றுக்குள் இருக்கும் தனது தந்தையை மேலே கொண்டு வருவதற்காக, மகன் பவன்குமார் மீண்டும் ஒரு கயிற்றைக் கிணற்றுக்குள் தொங்கவிட்டார்.

அந்தக் கயிற்றைத் தனது இடுப்பில் இறுக்கமாகக் கட்டிக் கொண்டு ராஜு மேலே ஏறி வந்த சமயத்தில், எதிர்பாராத விதமாக நிலைதடுமாறிக் கயிறு நழுவி மீண்டும் கிணற்றுக்குள் விழுந்து விட்டார். இதனால் அதிர்ச்சியடைந்த பவன்குமார், அக்கம் பக்கத்தினர் மற்றும் கிராம மக்களின் உதவியுடன் இரண்டு மூன்று முறை கயிற்றைப் போட்டுத் தந்தையை மேலே இழுக்க முயற்சி செய்தார். எனினும், பலத்த சோர்வு காரணமாக ராஜுவால் மேலே வர முடியவில்லை. இதனால் அச்சமடைந்த மகன் பவன்குமார், தனது தந்தையைத் தனி ஆளாகக் காப்பாற்றும் துணிச்சலுடன் அவசரமாகக் கிணற்றுக்குள் இறங்கினார்.

கிணற்றுக்குள் சென்ற பவன்குமார், தனது தந்தையின் இடுப்பில் கயிற்றைக் கட்டி மேலே இழுத்து வர முயன்றார். ஆனால், கிணற்றின் ஆழமான பகுதியில் நிலவிய கடுமையான வாயு அழுத்தம் காரணமாக இருவருமே மீண்டும் நிலைதடுமாறித் தண்ணீருக்குள் விழுந்தனர். அப்போது இவர்களின் நிலையைக் கண்டு பதறிய அதே கிராமத்தைச் சேர்ந்த மல்லேஷ் என்பவர், கயிற்றைக் கட்டிக்கொண்டு அவர்களைக் காப்பாற்றக் கிணற்றுக்குள் வேகமாக இறங்கினார். ஆனால் உள்ளே ஆக்சிஜன் வாயு பற்றாக்குறை ஏற்பட்டு மூச்சுத்திணறல் உண்டானதால், அவர்கள இருவரையும் காப்பாற்ற முடியாமல் அவர் அவசரமாக வெளியேறினார்.

கிணற்றில் குதித்து தற்கொலை

இதற்குள் கிணற்றின் ஆழத்தில் நச்சு வாயு மற்றும் ஆக்சிஜன் சரியாகக் கிடைக்காத காரணத்தால், ராஜு மற்றும் பவன்குமார் ஆகிய இருவருமே மெல்ல மெல்லத் தங்களது சுயநினைவை இழந்து தண்ணீரில் மூழ்கிப் பரிதாபமாக உயிர் இழந்தனர். இந்தத் திடுக்கிடும் சம்பவத்தைக் கண்டு நிலைகுலைந்து போன கிராமத்தினர், உடனடியாக உள்ளூர் போலீசாருக்கும் தீயணைப்புத் துறையினருக்கும் தகவல் தெரிவித்தனர்.

தகவல் அறிந்து விரைந்து வந்த போலீசார் மற்றும் தீயணைப்பு மீட்புக் குழுவினர், நீண்ட நேரம் போராடி கிணற்றுக்குள் இருந்து தந்தை மற்றும் மகன் ஆகிய இருவரின் சடலங்களையும் மீட்டனர். மீட்கப்பட்ட உடல்கள் உடற்கூறாய்வு பரிசோதனைக்காக அருகில் உள்ள அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டன. ஒரே குடும்பத்தில் வாயில்லா ஜீவனைக் காப்பாற்றச் சென்று தந்தை மற்றும் மகன் ஆகிய இரு தூண்களை இழந்ததால், அவர்களது குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் மருத்துவமனை வளாகத்தில் கதறி அழுதது காண்போரின் நெஞ்சைக் உருக வைப்பதாக இருந்தது. இத்துயரச் சம்பவம் குறித்துப் போலீசார் தற்பொழுது வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.