நெல்லை விக்கிரமசிங்கபுரம் அருகே தோட்டத்தில் பெண் கரடி இறந்து கிடந்த சோகம்!
திருநெல்வேலி மாவட்டம் விக்கிரமசிங்கபுரம் அருகே உள்ள ஒரு தோட்டத்தில் சுமார் 8 வயதுடைய பெண் கரடி ஒன்று இறந்து கிடந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அம்பாசமுத்திரம் வனக்கோட்டத்திற்கு உட்பட்ட வடமலைசமுத்திரம் கிராமத்தில், பெட்ரோல் பங்க் பின்புறம் உள்ள செய்யது சுலைமான் என்பவரது தோட்டத்தில் இந்தச் சம்பவம் நடந்துள்ளது. நேற்று மாலை சுமார் 5 மணியளவில், அத்தோட்டத்தில் 8 வயது மதிக்கத்தக்க பெண் கரடி ஒன்று சடலமாகப் பிணமாகக் கிடப்பதைப் பார்த்த பகுதி மக்கள் வனத்துறைக்குத் தகவல் தெரிவித்தனர்.
தகவல் கிடைத்ததும், வனத்துறைத் துணை இயக்குநர் மற்றும் வனக் கால்நடை மருத்துவக் குழுவினர் உடனடியாகச் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று இறந்து கிடந்த கரடியின் உடலைப் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
வனத்துறை விதிமுறைகளின்படி, கரடியின் உடற்கூறு ஆய்வு செய்யத் தேவையான நடவடிக்கைகள் துரிதமாக மேற்கொள்ளப்பட்டன. ஆய்வகப் பரிசோதனை அறிக்கைகள் மற்றும் உடற்கூறு ஆய்வு முடிவுகள் முழுமையாகக் கிடைத்த பின்னரே கரடியின் உயிரிழப்பிற்கான உண்மையான காரணம் என்னவென்று தெரியவரும் என வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.
