நீலகிரி வனப்பகுதியில் பெண் சிறுத்தை சடலமாக மீட்பு - வனத்துறையினர் விசாரணை!

 
சிறுத்தை

நீலகிரி மாவட்டம் முதுமலை புலிகள் காப்பகத்திற்குட்பட்ட சிங்காரா வனப்பகுதியில் பெண் சிறுத்தை ஒன்று இறந்து கிடந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

முதுமலை புலிகள் காப்பகத்தின் வெளி மண்டல பகுதியான சிங்காரா வனச்சரகத்தில் வனத்துறையினர் வழக்கமான ரோந்துப் பணியில் ஈடுபட்டபோது, நார்தன்ஹே காப்பு காடு கிரிட் ஓடை பகுதியில் 10 வயதான பெண் சிறுத்தை ஒன்று இறந்து கிடப்பது கண்டறியப்பட்டது.

 சிறுத்தை

உடனடியாக கள இயக்குனர் கிருபா சங்கர் உத்தரவின் பேரில், துணை இயக்குனர் வித்யாதர் மற்றும் வனச்சரகர் விமல்குமார் உள்ளிட்டோர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பார்வையிட்டு விசாரணை நடத்தினர்.

முதுமலை கால்நடை மருத்துவர் ராஜேஷ்குமார் தலைமையிலான மருத்துவக் குழுவினர், தேசிய புலிகள் பாதுகாப்பு ஆணையத்தின் நிலையான செயல்பாட்டு நடைமுறைகளின்படி சிறுத்தையின் உடலுக்குப் பிரேத பரிசோதனை செய்தனர். பின்னர் அதன் உடல் எரியூட்டப்பட்டது.

திருப்பதி அலிபிரி சிறுத்தை

சிறுத்தையின் உடல் பாகங்களின் மாதிரிகள் சேகரிக்கப்பட்டு ஆய்வுக்கு அனுப்பப்பட்டுள்ளன. அதன் முடிவுகள் வந்த பின்னரே உண்மையான காரணம் தெரியவரும் என்றாலும், வயது மூப்பு மற்றும் பின்னங்கால்களில் ஏற்பட்ட பலவீனம் காரணமாகச் சிறுத்தை உயிரிழந்திருக்கலாம் என முதற்கட்டமாக வனத்துறையினர் சந்தேகிக்கின்றனர்.