மதுராந்தகத்தில் திருவிழா... எம்.ஜி.ஆர் சிலைக்கு மாலை அணிவித்தார் முதலமைச்சர் விஜய்!
மதுராந்தகம் சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தல் பிரசாரத்திற்காகச் சென்றுள்ள தமிழக முதலமைச்சர் விஜய், அங்குள்ள முன்னாள் முதலமைச்சர் எம்.ஜி.ஆர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இந்த நிகழ்வின்போது திரண்ட ஆயிரக்கணக்கான தொண்டர்களின் ஆரவாரத்தால் அப்பகுதி முழுவதும் உற்சாகக் கோலபூண்டது.
மதுராந்தகத்தில் தேர்தல் பரப்புரை மேற்கொள்ளச் சென்றுள்ள முதலமைச்சர் விஜய், பயணத்தின் இடையே அங்குள்ள எம்.ஜி.ஆர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். தவெக வேட்பாளர் மரகதம் குமரவேல் உடனிருந்தார்.

விஜயின் பிரசாரத்திற்காக ஆத்தூர் பகுதியில் பிரம்மாண்ட மேடை அமைக்கப்பட்டுள்ளது. மேலும், பிரசாரத்தையொட்டி ஆத்தூர் சுங்கச்சாவடியில் வாகனங்கள் அனைத்தும் கட்டணம் இன்றிச் செல்ல அனுமதிக்கப்பட்டு வருகின்றன.
பிரசாரக் கூட்டத்தில் பாஸ் உள்ளவர்களுக்கு மட்டுமே அனுமதி என்று முன்னதாக அறிவிக்கப்பட்டிருந்த போதிலும், ஆயிரக்கணக்கான தொண்டர்கள் உள்ளே நுழைய முயன்றதால் அங்கு அமைக்கப்பட்டிருந்த தடுப்புகள் தகர்க்கப்பட்டன. கூட்ட நெரிசலைக் கட்டுப்படுத்த முடியாத சூழ்நிலை ஏற்பட்டதால், தற்போது பாஸ் இல்லாத பொதுமக்களும் உள்ளே அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.
தலைவர் விஜய் வருகையைக் கேள்விப்பட்டு அப்பகுதியில் திரண்ட தொண்டர்களும் ரசிகர்களும் 'தளபதி... தலைவர்...' என எழுப்பிய கோஷங்களால் அப்பகுதி முழுவதும் பெரும் திருவிழாக்கோலம் போல் காட்சியளிக்கிறது.
