மே.வங்கத்தில் திருவிழா.. இன்று முதல்வராக பதவியேற்கிறார் சுவேந்து அதிகாரி!
மேற்கு வங்க சட்டமன்றத் தேர்தலில் பாஜக அமோக வெற்றி பெற்றுள்ள நிலையில், மாநிலத்தின் புதிய முதலமைச்சராகச் சுவேந்து அதிகாரி இன்று பதவியேற்க உள்ளார்.
நேற்று கொல்கத்தாவில் நடைபெற்ற பாஜக எம்.எல்.ஏ-க்களின் கூட்டத்தில், சுவேந்து அதிகாரி சட்டமன்றக் கட்சித் தலைவராக ஒருமனதாகத் தேர்வு செய்யப்பட்டார். இந்தத் தேர்தலில் நந்திகிராம் மற்றும் பவானிபூர் ஆகிய இரண்டு நட்சத்திரத் தொகுதிகளிலும் போட்டியிட்டுச் சுவேந்து அதிகாரி அபார வெற்றி பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
நேற்று மாலை ஆளுநர் ஆர்.என். ரவியை நேரில் சந்திக்கும் சுவேந்து அதிகாரி, பாஜக எம்.எல்.ஏ-க்களின் ஆதரவுக் கடிதத்தை வழங்கி ஆட்சி அமைக்க உரிமை கோருகிறார்.

சுமார் 15 ஆண்டுகளாக மேற்கு வங்கத்தை ஆண்டு வந்த மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாமுல் காங்கிரஸ் (TMC) ஆட்சி இந்தத் தோல்வியின் மூலம் முடிவுக்கு வந்துள்ளது. கிழக்கு இந்தியாவில் பாஜக ஒரு மாநிலத்தைத் தனிப் பெரும்பான்மையுடன் கைப்பற்றுவது இதுவே முதல் முறை என்பதால், தேசிய அரசியலில் இது மிகப்பெரிய மாற்றமாகக் கருதப்படுகிறது.

இன்று மே 9ம் தேதி கொல்கத்தாவில் நடைபெறும் பிரம்மாண்ட விழாவில் மேற்கு வங்கத்தின் முதலமைச்சராகச் சுவேந்து அதிகாரி பதவியேற்கிறார். இந்த விழாவில் பிரதமர் நரேந்திர மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா மற்றும் முக்கியத் தலைவர்கள் பங்கேற்க உள்ளனர். மம்தா பானர்ஜியின் கோட்டையாகக் கருதப்பட்ட மேற்கு வங்கத்தில், சுவேந்து அதிகாரியின் இந்த எழுச்சி இந்திய அரசியலில் புதிய விவாதங்களை உருவாக்கியுள்ளது.
