திருவிழாவில் கோர விபத்து... சாமி ஊர்வலத்தில் பாலம் இடிந்து 8 பேர் படுகாயம்!

 
திருவிழா திருவிழா

மங்களூரு அருகே உள்ள ஒரு கிராமத்தில் நடைபெற்ற கோவில் திருவிழாவின் போது எதிர்பாராத விதமாகப் பெரும் விபத்து நிகழ்ந்துள்ளது. விழாவின் முக்கிய நிகழ்வாகச் சாமி சிலையைத் தூக்கிக் கொண்டு பல்லக்கில் சென்ற பக்தர்கள், அங்குள்ள ஒரு பழைய நடைபாலத்தைக் கடக்க முயன்றனர். அப்போது பாரம் தாங்காமல் அந்தப் பாலம் திடீரென இடிந்து விழுந்ததில் பல்லக்கைச் சுமந்து சென்ற 8 பேர் அப்படியே கால்வாய்க்குள் விழுந்தனர்.

இந்த விபத்தில் பல்லக்கைச் சுமந்து சென்றவர்களுக்குப் பலத்த காயம் ஏற்பட்டதோடு, அவர்கள் கொண்டு சென்ற சாமி சிலையும் சேதமடைந்தது. கால்வாயில் விழுந்து தவித்தவர்களை அங்கிருந்த மற்ற பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் உடனடியாக மீட்டு சிகிச்சைக்காக அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர். சுமார் 50 ஆண்டுகள் பழமையான அந்தப் பாலம் மிகவும் பலவீனமாக இருந்ததே இந்த விபத்துக்கு முதன்மையான காரணம் என்று சொல்லப்படுகிறது.

தற்போது இந்த விபத்து தொடர்பான அதிர்ச்சியூட்டும் காணொளி காட்சிகள் இணையதளங்களில் வெளியாகிப் பெரும் வைரலாகி வருகிறது. திருவிழா கொண்டாட்டத்தின் போது ஏற்பட்ட இந்த அசம்பாவிதம் அந்தப் பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பாலத்தின் உறுதித்தன்மையை ஆராயாமல் இத்தனை பேர் அதன் மீது சென்றது குறித்து அதிகாரிகள் தற்போது தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.