FIFA : 24 ஆண்டு கால கனவும், ஏக்கமும்... 6வது முறையாக மகுடம் சூடுமா பிரேசில்?!

 
பிரேசில் கால்பந்து மெஸ்ஸி பிரேசில் கால்பந்து மெஸ்ஸி

உலகக் கோப்பை கால்பந்து வரலாற்றில் ஐந்து முறை சாம்பியன் பட்டம் வென்று, உலகின் மிகச்சிறந்த கால்பந்து வல்லரசாகத் திகழும் பிரேசில் அணி, 2026 உலகக் கோப்பையில் தனது 24 ஆண்டுகால நீண்ட காத்திருப்புக்கு முற்றுப்புள்ளி வைக்கும் நோக்கில் களம் காணத் தயாராகி வருகிறது. கடைசியாக 2002 ஆம் ஆண்டு ரொனால்டோ, ரிவால்டோ, ரொனால்டின்ஹோ போன்ற ஜாம்பவான்களின் பங்களிப்போடு கோப்பையை வென்ற பிரேசில், அதன் பிறகு பலமுறை அரையிறுதி மற்றும் கால் இறுதிப் போட்டிகளோடு வெளியேறி ரசிகர்களுக்கு ஏமாற்றத்தையே அளித்துள்ளது.

அமெரிக்கா, மெக்சிகோ மற்றும் கனடா ஆகிய நாடுகள் இணைந்து நடத்தும் இந்த 2026 உலகக் கோப்பைத் தொடர், பிரேசில் அணிக்கு தங்களின் பழைய பெருமையை மீட்டெடுப்பதற்கான ஒரு மிக முக்கிய வாய்ப்பாகக் கருதப்படுகிறது.

இந்த முறை 48 அணிகள் பங்கேற்கும் புதிய வடிவிலான உலகக் கோப்பைத் தொடரில், பிரேசில் அணி 'குரூப் சி' பிரிவில் இடம் பிடித்துள்ளது. இந்தப் பிரிவில் பிரேசிலுடன் மொராக்கோ, ஸ்காட்லாந்து மற்றும் ஹைட்டி ஆகிய நாடுகள் போட்டியிடுகின்றன. நட்சத்திர வீரர்களின் பலத்தோடு களமிறங்கும் பிரேசில் அணி, லீக் சுற்றுகளை எளிதாகக் கடந்து அடுத்தடுத்த சுற்றுகளுக்கு முன்னேறும் என்று கால்பந்து விமர்சகர்களால் கணிக்கப்படுகிறது.

பிரேசில் கால்பந்து மெஸ்ஸி

உலகக் கோப்பைத் தொடரின் லீக் சுற்றுகளில் பிரேசில் அணி விளையாடவிருக்கும் போட்டிகள்: 

பிரேசில் VS மொராக்கோ — ஜூன் 14, 2026 (இந்திய நேரப்படி அதிகாலை 3:30 மணி) — நியூயார்க் நியூஜெர்சி மைதானம்

பிரேசில் VS ஹைட்டி — ஜூன் 20, 2026 (இந்திய நேரப்படி நள்ளிரவு 12:30 மணி) — பிலடெல்பியா மைதானம்

பிரேசில் VS ஸ்காட்லாந்து — ஜூன் 24, 2026 (இந்திய நேரப்படி மாலை 6:00 மணி) — மியாமி மைதானம்

பிரேசில் கால்பந்து மெஸ்ஸி

நடப்பு சாம்பியன்களின் சவால்

பிரேசிலின் உலகக் கோப்பை கனவுக்குப் பெரும் சவாலாகத் திகழப்போவது லியோனல் மெஸ்ஸி தலைமையிலான நடப்பு சாம்பியன் அர்ஜென்டினா மற்றும் பிரான்ஸ், ஜெர்மனி, ஸ்பெயின் போன்ற ஐரோப்பிய கால்பந்து சக்திகள்தான். குறிப்பாக, தென் அமெரிக்க தகுதிச் சுற்றுப் போட்டிகளில் பிரேசில் அணி சந்தித்த சில பின்னடைவுகள் ரசிகர்களிடையே சற்று கவலையை ஏற்படுத்தியிருந்தாலும், உலகக் கோப்பை போன்ற பிரம்மாண்ட மேடைகளில் பிரேசில் எப்போதும் தனது அசாத்திய ஆட்டத்தை வெளிப்படுத்தும் வல்லமை கொண்டது. திறமையான இளம் வீரர்களின் வேகமும், சீனியர் வீரர்களின் அனுபவமும் இணைந்து இந்த முறை பிரேசிலின் 24 ஆண்டுகால உலகக் கோப்பை தாகத்தைத் தணிக்குமா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.