FIFA : உலகக் கோப்பை கால்பந்து... வரலாறு படைக்க காத்திருக்கும் மெஸ்ஸி, எம்பாப்பே!

 
கால்பந்து மெஸ்ஸி கால்பந்து மெஸ்ஸி

கால்பந்து உலகின் மிக பிரம்மாண்ட திருவிழாவான 23-வது ஃபிஃபா உலகக் கோப்பைத் தொடர் ஜூன் 11 அன்று வட அமெரிக்காவில் மிகக் கோலாகலமாகத் தொடங்குகிறது. இந்த முறை சாம்பியன் பட்டத்திற்கான பலப்பரீட்சை ஒருபுறமிருக்க, உலகக் கோப்பை வரலாற்றில் அதிக கோல்கள் அடித்த வீரர் என்ற சாதனையைத் தகர்க்கும் வரலாற்றுப் போரும் இந்தத் தொடரில் அரங்கேறவிருக்கிறது.

ஜெர்மனி அணியின் முன்னாள் ஜாம்பவான் மிரோஸ்லாவ் க்ளோஸ் 16 கோல்களுடன் உலகக் கோப்பை வரலாற்றில் அதிக கோல்கள் அடித்த வீரர்கள் பட்டியலில் முதலிடத்தில் நீடிக்கிறார். இந்த அசாத்தியமான சாதனையை முறியடித்து முதலிடத்தைப் பிடிக்கும் முனைப்பில் அர்ஜென்டினாவின் லியோனல் மெஸ்ஸி மற்றும் பிரான்ஸின் கைலியன் எம்பாப்பே ஆகிய இருபெரும் நட்சத்திரங்கள் களமிறங்குகிறார்கள்.

கால்பந்து மெஸ்ஸி

அர்ஜென்டினா அணியை வழிநடத்தும் லியோனல் மெஸ்ஸி, இதுவரை ஐந்து உலகக் கோப்பைத் தொடர்களில் பங்கேற்று 13 கோல்களை அடித்துள்ளார். 2022 ஆம் ஆண்டு அர்ஜென்டினா உலகக் கோப்பையை வென்றபோது மெஸ்ஸி அசாத்தியமான ஆட்டத்தை வெளிப்படுத்தி 7 கோல்களைக் குவித்தார். தற்போது க்ளோஸின் சாதனையைச் சமன் செய்ய 3 கோல்களும், அதை முறியடித்து புதிய சரித்திரம் படைக்க 4 கோல்களும் மெஸ்ஸிக்குத் தேவைப்படுகின்றன.

மறுபுறம், பிரான்ஸ் அணியின் நட்சத்திர ஆட்டக்காரரான கைலியன் எம்பாப்பே வெறும் இரண்டு உலகக் கோப்பைத் தொடர்களிலேயே (2018 மற்றும் 2022) 12 கோல்களை அடித்து ஒட்டுமொத்த உலகையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளார். குறிப்பாக 2022 உலகக் கோப்பை இறுதிப்போட்டியில் மெஸ்ஸியின் அர்ஜென்டினாவுக்கு எதிராக ஹேட்ரிக் கோல் அடித்து மிரட்டினார். க்ளோஸின் சாதனையை முறியடிக்க எம்பாப்பேவுக்கு இன்னும் 5 கோல்கள் மட்டுமே தேவை.

மெஸ்ஸி

உலகக் கோப்பை வரலாற்றில் அதிக கோல் அடித்தவர்கள்

லகக் கோப்பை கால்பந்து போட்டிகளின் இறுதிச் சுற்றுகளில் அதிக கோல்களைக் குவித்த ஐந்து சிறந்த வீரர்களின் பட்டியலில் முதலிடத்தில் மிரோஸ்லாவ் க்ளோஸ் (ஜெர்மனி) இருக்கிறார். மொத்தம் 16 கோல்கள் (24 போட்டிகள்). அடுத்து ரொனால்டோ நசாரியோ (பிரேசில்) - 15 கோல்கள் (19 போட்டிகள்). மூன்றாவதாக கெர்ட் முல்லர் (மேற்கு ஜெர்மனி) - 14 கோல்கள் (13 போட்டிகள்). அடுத்த இடத்தில் முறையே ஜஸ்ட் ஃபொன்டைன் (பிரான்ஸ்) - 13 கோல்கள் (6 போட்டிகள்) மற்றும் லியோனல் மெஸ்ஸி (அர்ஜென்டினா) - 13 கோல்கள் (26 போட்டிகள்) உள்ளனர்.

வயது மற்றும் தற்போதைய ஃபார்ம் அடிப்படையில் கைலியன் எம்பாப்பே இந்த உலகக் கோப்பையிலேயே அல்லது அதற்கு அடுத்த தொடர்களிலேயே க்ளோஸின் சாதனையைத் தாண்டி வெகுதூரம் செல்ல அதிக வாய்ப்புகள் உள்ளதாகக் கால்பந்து வல்லுநர்கள் கணிக்கின்றனர். அதே நேரத்தில், மெஸ்ஸி தனது கேரியரின் இறுதிப் பகுதியில் இந்த உலகக் கோப்பையில் விளையாடுவதால், அவரும் இந்த உச்சக்கட்ட சாதனையைத் தன்வசப்படுத்த முழு வீச்சில் போராடுவார் என்பதில் சந்தேகமில்லை. ஜூன் 12 முதல் தொடங்கும் குழுநிலைப் போட்டிகளில் இந்த இருவரில் யார் புதிய மைல்கல்லை எட்டப்போகிறார்கள் என்ற எதிர்பார்ப்பு தற்போதே ரசிகர்களிடம் தொற்றிக்கொண்டுள்ளது.