FIFA: நள்ளிரவில் கால்பந்து பைனல் மேட்ச்... அதிகாலை 4 மணி வரை உணவகங்களை திறக்க டெல்லி அரசு அனுமதி!

 
கால்பந்து

அமெரிக்காவில் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் 23-வது உலகக் கோப்பை கால்பந்து தொடர் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. 48 அணிகள் பங்கேற்று, இதுவரை 102 போட்டிகள் நிறைவடைந்துள்ள இந்த கால்பந்து திருவிழாவில், ஒட்டுமொத்த உலகமே ஆவலோடு எதிர்பார்க்கும் இறுதிப்போட்டி இன்னும் சில தினங்களில் அரங்கேற உள்ளது.

இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க நள்ளிரவுப் போட்டியை இந்திய ரசிகர்கள் எவ்விதத் தடையுமின்றித் தங்களின் நண்பர்களோடு கொண்டாடும் வகையில், டெல்லி அரசு உணவகங்கள் மற்றும் சிற்றுண்டிச்சாலைகளுக்குச் சிறப்புச் சலுகை ஒன்றை அறிவித்துள்ளது.

FIFA கால்பந்து உலக கோப்பை

உலகக் கோப்பை இறுதிப்போட்டி நடைபெறும் நள்ளிரவில், ரசிகர்கள் பெரிய திரைகளில் போட்டிகளைக் கண்டு களிக்கவும், தங்களுக்குப் பிடித்த உணவுகளை ருசிக்கவும் வசதியாக, திங்கட்கிழமை அதிகாலை 4.00 மணி வரை டெல்லியில் உள்ள அனைத்து உணவகங்களும், சிற்றுண்டிச்சாலைகளும் திறந்திருக்க டெல்லி அரசு அதிகாரப்பூர்வ அனுமதி வழங்கியுள்ளது. அரசின் இந்த அதிரடி முடிவுக்குத் தலைநகர கால்பந்து ரசிகர்கள் மத்தியில் பலத்த வரவேற்பு கிடைத்துள்ளது.

உலகக் கோப்பையின் இறுதி ஆட்டத்திற்கு முன்னதாக, 3-வது இடத்தை (வெண்கலப் பதக்கம்) தீர்மானிப்பதற்கான ஆட்டத்தில் முன்னாள் சாம்பியன்களான பிரான்ஸும், இங்கிலாந்தும் மியாமியில் பலப்பரீட்சை நடத்துகின்றன.

கால்பந்து மெக்ஸிக்கோ

இதனைத் தொடர்ந்து நடைபெறும் மகுடத்திற்கான இறுதிப்போட்டியில், தற்போதைய நடப்பு சாம்பியனான அர்ஜென்டினா அணி, பலம் வாய்ந்த ஸ்பெயின் அணியை எதிர்கொள்கிறது. இந்திய நேரப்படி நள்ளிரவு 12.30 மணிக்குத் தொடங்கும் இந்த இறுதிப்போட்டியில், கோப்பையைத் தக்கவைக்க அர்ஜென்டினாவும், புதிய சரித்திரம் படைக்க ஸ்பெயினும் மல்லுக்கட்ட உள்ளதால் உலகக் கோப்பை களம் தற்போதே சூடுபிடித்துள்ளது.