FIFA: சிறந்த வீரராக பாவ் குபார்சி தேர்வு... லமின் யமாலை முந்தி சாதனை.. குவியும் வாழ்த்துகள்!

 
பாவ் குபார்சி

அமெரிக்காவின் நியூஜெர்சியில் நடந்து முடிந்த 23-வது பிஃபா உலகக் கோப்பை கால்பந்து தொடரின் இறுதிப் போட்டியில், அர்ஜென்டினாவை வீழ்த்தி ஸ்பெயின் அணி உலக சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றி வரலாற்றுச் சாதனை படைத்துள்ளது. இந்த வரலாற்று வெற்றியின் கொண்டாட்டங்களுக்கு மத்தியில், ஸ்பெயின் அணியின் மற்றொரு இளம் நட்சத்திரமான பாவ் குபார்சி (Pau Cubarsí) இந்தத் தொடரின் 'சிறந்த இளம் வீரர்' விருதைக் கைப்பற்றி உலக கால்பந்து ரசிகர்களின் கவனத்தைத் தன் பக்கம் ஈர்த்துள்ளார்.

கால்பந்து உலகின் அசுர வளர்ச்சி கண்டு வரும் 19 வயதான ஸ்பெயின் வீரர் பாவ் குபார்சி, இந்த உயரிய விருதை வென்று அசத்தியுள்ளார். இந்த விருதுக்கான ரேசில் ஸ்பெயின் அணியின் உலகப் புகழ்பெற்ற நட்சத்திர இளம் வீரரான லமின் யமாலே முதலிடத்தில் வருவார் என்று உலகளவில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்டது.

கால்பந்து ஸ்பெயின்

ஆனால், தொடர் முழுவதும் மற்றும் இறுதிப் போட்டியில் குபார்சி வெளிப்படுத்திய அசாத்திய ஆட்டத் திறன், லமின் யமாலை பின்னுக்குத் தள்ளி இந்த விருதை இவருக்குப் பெற்றுத் தந்துள்ளது. இதன் மூலம், உலகக் கோப்பை வரலாற்றிலேயே 'சிறந்த இளம் வீரர்' விருதைப் பெற்ற மிக இளம் வயது வீரர்களின் பட்டியலில் பாவ் குபார்சி தற்போது இணைந்துள்ளார்.

இந்த உலகக் கோப்பைத் தொடர் முழுவதும் ஸ்பெயின் அணியின் சென்டர்-பேக் என்னும் மிக முக்கியத் தற்காப்புப் பிரிவில் பாவ் குபார்சி களம் கண்டார். எதிரணி வீரர்கள் எளிதில் கோல் அடித்துவிடாதபடி ஸ்பெயின் அணியின் அசைக்க முடியாத பெரும் தற்காப்பு அரணாகத் திகழ்ந்து பல கோல் முயற்சிகளை முறியடித்தார்.

யூரோ ஸ்பெயின்

குறிப்பாக, அர்ஜென்டினாவுக்கு எதிரான இறுதிப் போட்டியின் போது, 10 வீரர்களுடன் விளையாடிய ஸ்பெயின் அணியின் பின்வரிசையை மிகத் திறம்பட வழிநடத்தி, ஸ்பெயின் அணி 16 ஆண்டுகளுக்குப் பிறகு 2-வது முறையாக உலகக் கோப்பையை முத்தமிட இவரே முக்கியக் காரணமாக அமைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.