FIFA கால்பந்துப் போட்டி: சியாட்டில் கடும் வெயில்... மைதானத்திலேயே சுருண்டு விழுந்த நடுவர்!
அமெரிக்காவின் சியாட்டில் மைதானத்தில் நடைபெற்ற உலகக் கோப்பை கால்பந்து தொடரின் லீக் ஆட்டத்தின் போது, கொளுத்திய அசுர வெயிலின் தாக்கத்தைத் தாங்க முடியாமல் ஜெர்மனியைச் சேர்ந்த நடுவர் ஒருவர் மைதானத்திலேயே சுருண்டு விழுந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உலகக் கோப்பைத் தொடரின் முக்கிய லீக் ஆட்டத்தில் பலம் வாய்ந்த ஆஸ்திரேலியா மற்றும் நடப்புத் தொடரை நடத்தும் அமெரிக்காஆகிய இரு அணிகளும் நேருக்கு நேர் மோதின. சியாட்டில் நகரில் உள்ளூர் நேரப்படி மதிய வேளையில், வழக்கத்திற்கு மாறான அசுர வெயில் மற்றும் வெப்ப அலைக்குமத்தியில் இப்போட்டி நடைபெற்றது.

இப்போட்டியை நடத்தும் முக்கிய பிரதான நடுவராக ஜெர்மனி நாட்டைச் சேர்ந்த பிரபல நடுவர் பெலிக்ஸ் ஜாயேர் நியமிக்கப்பட்டிருந்தார். அவரது சர்வதேச கால்பந்து நடுவர் வாழ்க்கையில், உலகக் கோப்பைத் தொடர் ஒன்றில் அவர் நடுவர் பணியைக் கவனிப்பது இதுவே முதல் முறையாகும். போட்டியின் தொடக்கம் முதலே வீரர்கள் மற்றும் நடுவர்கள் வெயிலின் தாக்கத்தால் கடுமையாக அவதிப்பட்டு வந்தனர்.
விறுவிறுப்பாக நடைபெற்றுக் கொண்டிருந்த ஆட்டத்தின் இறுதிக்கட்டத்தில், மைதானத்தில் ஓடிக் கொண்டிருந்த நடுவர் பெலிக்ஸ் ஜாயேர், வெயிலின் தாக்கத்தையும் உடல் வறட்சியையும் சமாளிக்க முடியாமல் திடீரென நிலைதடுமாறி மைதானத்திலேயே சுருண்டு சரிந்து விழுந்தார்.

நடுவர் மைதானத்தில் விழுந்த உடனே இரு அணி வீரர்களும் அதிர்ச்சியடைந்து மருத்துவக் குழுவினரை நோக்கிக் கைகாட்டினர். மைதானத்திற்குள் விரைந்த அவசர மருத்துவக் குழுவினர், மயக்கமடைந்த நடுவர் பெலிக்ஸ் ஜாயேருக்கு முதலுதவி சிகிச்சை அளித்து, உடனடியாக ஸ்ட்ரெச்சர் மூலம் மைதானத்திற்கு வெளியே அழைத்துச் சென்றனர்.
இதனைத் தொடர்ந்து, மாற்று நடுவர் உடனடியாகக் களமிறக்கப்பட்டுப் போட்டியின் எஞ்சிய நிமிடங்கள் நடத்தி முடிக்கப்பட்டன. அமெரிக்காவில் கோடைக்கால வெயில் அசுர அளவில் பதிவாகி வரும் நிலையில், பிஃபா நிர்வாகம் வீரர்களின் பாதுகாப்பிற்காகப் போட்டிகளுக்கு நடுவே கூடுதல் 'கூலிங் பிரேக்' இடைவெளிகளை வழங்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது.
