FIFA WC 2026 : எம்பாப்பே அதிரடி ஆட்டம்... செனகலை 3 -1 கணக்கில் வீழ்த்தி பிரான்ஸ் அபார வெற்றி!

 
கால்பந்து பிரான்ஸ் கால்பந்து பிரான்ஸ்

அமெரிக்கா, மெக்சிகோ மற்றும் கனடா ஆகிய நாடுகளில் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் 23-வது உலகக் கோப்பை கால்பந்து தொடரின் லீக் சுற்றில், பலம் வாய்ந்த பிரான்ஸ் அணி 3-1 என்ற கோல் கணக்கில் செனகல் அணியைத் துவம்சம் செய்து அபார வெற்றி பெற்றுள்ளது.

அமெரிக்காவின் நியூயார்க் நியூ ஜெர்சி மைதானத்தில் நடைபெற்ற இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க 'ஐ' பிரிவு லீக் ஆட்டத்தில், ஆரம்பம் முதலே பிரான்ஸ் அணி ஆதிக்கத்தைச் செலுத்தியது.

போட்டியின் பெரும்பகுதி நேரம் பந்து பிரான்ஸ் அணியினரின் கட்டுப்பாட்டிலேயே வலம் வந்தது. ஆட்டத்தின் தொடக்கம் முதலே பிரான்ஸ் வீரர்கள் அதிரடியான தாக்குதல் ஆட்டத்தைக் கையாண்டு, செனகல் அணியின் கோல் எல்லையைத் தொடர்ச்சியாக முற்றுகையிட்டனர்.

செனகல் அணியின் பின்கள வீரர்களும் கோல் கீப்பரும் இணைந்து பிரான்சின் ஆரம்பகட்ட கோல் முயற்சிகளைத் தங்களது பலமான தடுப்பு அரண் மூலம் தடுத்து நிறுத்தப் போராடினர். ஆட்டத்தின் பிற்பாதியில் பிரான்ஸ் அணியின் நட்சத்திர வீரர் கைலியன் எம்பாப்பே தனது அசாத்திய வேகத்தால் செனகலின் தடுப்பு அரணைத் தகர்த்தார்.

FIFA கால்பந்து உலக கோப்பை

பிரான்ஸ் அணிக்குக் கூடுதல் பலம் சேர்க்கும் வகையில் விளையாடிய கைலியன் எம்பாப்பே அடுத்தடுத்து 2 கோல்களை அடித்து அணியை முன்னிலைக்குக் கொண்டு சென்றார். அவரைத் தொடர்ந்து பிரான்ஸ் அணியின் மற்றொரு முக்கிய வீரரான பிராட்லி பார்கோலா தனது பங்கிற்கு 1 கோல் அடித்து அணியின் வெற்றியை உறுதி செய்தார்.

மறுபுறம், ஆட்டத்தின் இறுதிவரை போராடிய செனகல் அணியில் இப்ராஹிம் மபாயே என்பவர் மட்டும் அணியின் சார்பில் 1 ஆறுதல் கோல் அடித்தார். இறுதிவரை செனகல் அணியால் பிரான்சின் பலமான ஆட்டத்திற்கு ஈடுகொடுக்க முடியவில்லை.

ஆட்டத்தின் முடிவில் 3-1 என்ற கோல் கணக்கில் செனகலை வீழ்த்திய பிரான்ஸ் அணி, லீக் சுற்றில் தனது வெற்றிகரமானப் பயணத்தைத் தொடர்ந்துள்ளது.

சர்வதேச கால்பந்து வரலாற்றில் முதன்முறையாக இந்த உலகக் கோப்பைத் தொடரில் மொத்தம் 48 அணிகள் பங்கேற்றுள்ளன. இவை 12 பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டு லீக் சுற்றுகள் நடத்தப்பட்டு வருகின்றன. ஒவ்வொரு பிரிவிலும் முதல் இரண்டு இடங்களைப் பிடிக்கும் டாப்-2 அணிகளும், மூன்றாவது இடத்தைப் பிடிக்கும் சிறந்த 8 அணிகளும் என மொத்தம் 32 அணிகள் அடுத்த 'நாக்-அவுட்' சுற்றுக்குத் தகுதி பெறவுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.