FIFA WC 2026: கோப்பை யாருக்கு? கடந்த 3 உலகக் கோப்பை வெற்றியாளரை முன்கூட்டியே கணித்த ஜெர்மானிய கணிதவியலாளர் கணிப்பு!

 
கால்பந்து கால்பந்து

வட அமெரிக்காவில் 2026 ஃபிஃபா உலகக் கோப்பை கால்பந்து திருவிழா தொடங்க உள்ள நிலையில், சமூக ஊடகங்களில் ரசிகர்கள் தங்களின் கணிப்புகளைப் பகிர்ந்து பரிசுப் போட்டிகளில் ஆர்வம் காட்டி வருகின்றனர். இதில் ஒட்டுமொத்த கால்பந்து உலகின் கவனத்தையும் ஈர்த்துள்ளது ஒரு குறிப்பிட்ட நபரின் கணிப்புதான்.

கடந்த மூன்று உலகக் கோப்பைகளின் வெற்றியாளர்களையும் நூறு சதவீதம் துல்லியமாகக் கணித்த ஜெர்மானிய கணிதவியலாளர் ஜோக்கிம் கிளெமென்ட். 2014-ல் ஜெர்மனி, 2018-ல் பிரான்ஸ் மற்றும் 2022-ல் அர்ஜென்டினா ஆகிய அணிகளின் மகுடத்தைச் சரியாகக் கணித்த கிளெமென்ட், தற்போது ஜூலை 19 அன்று நியூ ஜெர்சியின் மெட்லைஃப் ஸ்டேடியத்தில் நடக்கவிருக்கும் இறுதிப் போட்டியில் கோப்பையை முத்தமிடப் போகும் நாடு எது என்பதை வெளிப்படுத்தியுள்ளார்.

ரசிகர்கள் எதிர்பார்க்கும் அர்ஜென்டினா, பிரான்ஸ், பிரேசில், இங்கிலாந்து அல்லது ஸ்பெயின் ஆகிய நாடுகள் இந்த வரிசையில் இல்லை. மாறாக, உலகக் கோப்பை வரலாற்றில் நீண்டகாலமாக நீடித்து வரும் ஏமாற்றத்திற்கு முற்றுப்புள்ளி வைத்து, நெதர்லாந்து அணி முதல்முறையாக உலக சாம்பியன் ஆகும் என்று கிளெமென்ட் கணித்துள்ளார்.

ஜோக்கிம் கிளெமென்ட்டின் கணிப்புகள் மூடநம்பிக்கை, மனோசக்தி கொண்ட விலங்குகள் அல்லது வெறும் உள்ளுணர்வின் அடிப்படையில் அமைந்தவை அல்ல. முற்றிலும் அறிவியல் மற்றும் கணிதக் கோட்பாடுகளின் அடிப்படையிலானது என்பதால் கால்பந்து வட்டாரங்களில் இதற்குப் பெரும் மதிப்பு உள்ளது.


"தென் அமெரிக்க மண்ணில் எந்த ஐரோப்பிய நாடும் உலகக் கோப்பையை வெல்ல முடியாது" என்ற வரலாற்று விதியை உடைத்து, பிரேசிலில் நடந்த 2014 உலகக் கோப்பையைத் தனது தாய்நாடான ஜெர்மனி வெல்லும் என்று முதன்முதலில் துல்லியமாகக் கணித்து கிளெமென்ட் பிரபலமடைந்தார். அதனைத் தொடர்ந்து 2018-ல் ரஷ்யாவில் பிரான்ஸின் வெற்றியையும், 2022-ல் கத்தாரில் மெஸ்ஸி தலைமையிலான அர்ஜென்டினாவின் வெற்றியையும் அவர் சரியாகக் கணித்திருந்தார்.

தனது கணித மாடல் இவ்வளவு பெரிய வெற்றியைப் பெறும் என்று தான் ஒருபோதும் எதிர்பார்க்கவில்லை என ஜெர்மனியின் 'டெர் ஸ்பீகல்' பத்திரிகைக்கு அளித்த பேட்டியில் கிளெமென்ட் ஒப்புக்கொண்டுள்ளார்.

உலகக் கோப்பை வரலாற்றில் மூன்று முறை இறுதிப் போட்டி வரை முன்னேறியும், இதுவரை ஒருமுறை கூடக் கோப்பையை வெல்ல முடியாத துரதிர்ஷ்டவசமான அணியாக டச்சு நாடு திகழ்கிறது. ஆனால், கிளெமென்ட்டின் கணித மாடல் 2026 ஆம் ஆண்டு நெதர்லாந்துக்கு ஒரு திருப்புமுனையாக அமையும் என்று காட்டுகிறது.

ரொனால்ட் கோமனின் தலைமையிலான நெதர்லாந்து அணி, இந்த முறை அரையிறுதியில் பலம் வாய்ந்த ஸ்பெயினைத் தோற்கடிக்கும் என்றும், பின்னர் நடக்கும் இறுதிப் போட்டியில் கிறிஸ்டியானோ ரொனால்டோவின் போர்ச்சுக்கல் அணியை வீழ்த்தி தங்களின் முதல் உலகக் கோப்பை மகுடத்தைச் சூடும் என்றும் கிளெமென்ட்டின் கணிப்பு கூறுகிறது. மற்றொரு அரையிறுதியில் தாமஸ் டுச்செலின் இங்கிலாந்து அணியைப் போர்ச்சுக்கல் வெளியேற்றும் என்றும் இந்த மாடல் கூறுகிறது.

கிளெமென்ட்டின் இந்தத் தனித்துவமான வழிமுறை, வெறும் கால்பந்து புள்ளிவிவரங்களை மட்டும் சார்ந்து இருப்பதில்லை. மாறாக, ஒரு நாட்டின் தனிநபர் மொத்த உள்நாட்டு உற்பத்தி, அங்குள்ள விளையாட்டு உள்கட்டமைப்பின் தரம், நாட்டின் மக்கள் தொகை அளவு, அந்த நாட்டின் கலாச்சாரத்தில் கால்பந்துக்கு இருக்கும் முக்கியத்துவம் மற்றும் சர்வதேச தரவரிசையில் அந்த அணியின் தற்போதைய நிலை ஆகிய பலதரப்பட்ட காரணிகளை ஒருங்கிணைத்து இந்த மாடல் உருவாக்கப்பட்டுள்ளது.

கால்பந்து

இருப்பினும், கால்பந்து விளையாட்டில் 'வாய்ப்பு' மற்றும் அதிர்ஷ்டம் என்ற ஒரு முக்கிய அம்சம் இருப்பதையும் கிளெமென்ட் மறுக்கவில்லை. தனது கணிப்பை ஒரு லாட்டரி விளையாட்டு அல்லது நாணயத்தைச் சுண்டுவதைப் போன்றது என்று வர்ணிக்கும் அவர், இதை ஒரு இறுதி முடிவிற்கான உத்தரவாதமாக எடுத்துக்கொண்டு யாரும் பந்தயம் கட்ட வேண்டாம் என்றும் எச்சரித்துள்ளார்.

கணிதவியலாளரின் இந்தக் கணிப்பு ஒருபுறமிருக்க, தற்போதைய டச்சு அணியும் மிக வலுவான வீரர்களுடன் களமிறங்குகிறது. கேப்டன் வர்ஜில் வான் டைக் தற்காப்புப் பகுதியை இரும்புக் கோட்டையாக மாற்ற, பார்சிலோனா நடுக்கள வீரர் ஃபிரெங்கி டி ஜாங் மற்றும் நட்சத்திர ஃபார்வர்ட் மெம்ஃபிஸ் டெபாய் ஆகியோர் அணியின் தூண்களாக உள்ளனர். சமீபத்திய சர்வதேச நட்புப் போட்டிகளில் அல்ஜீரியா மற்றும் நார்வேக்கு எதிராக இந்த அணி காட்டிய அதிரடி ஆட்டம் ரசிகர்களிடையே பெரும் நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது.

குரூப் F பிரிவில் இடம் பெற்றுள்ள நெதர்லாந்து அணி, ஜூன் 14 அன்று ஜப்பானுக்கு எதிரான போட்டியுடன் தனது உலகக் கோப்பை பயணத்தைத் தொடங்குகிறது. அதனைத் தொடர்ந்து ஸ்வீடன் மற்றும் துனிசியா ஆகிய அணிகளை எதிர்கொள்கிறது. கடந்த காலத்தின் மிகச்சிறந்த டச்சு அணிகளால் சாதிக்க முடியாததை இந்த முறை வான் டைக் தலைமையிலான படை சாதிக்குமா மற்றும் கிளெமென்ட்டின் ஹாட்ரிக் கணிப்பு நான்காவது முறையாகவும் பலிக்குமா என்பதைப் பார்க்க ஒட்டுமொத்த உலகமே ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கிறது.