FIFA WC: 68 ஆண்டுகால சாதனை முறியடிப்பு.. 33 போட்டிகளிலேயே அபாரம்!
அமெரிக்கா, கனடா மற்றும் மெக்சிகோ ஆகிய நாடுகளில் பரபரப்புடன் நடைபெற்று வரும் உலகக் கோப்பை கால்பந்து தொடர், மிகக் குறுகிய காலத்தில் 100 கோல்களை எட்டி கடந்த 68 ஆண்டுகால உலகக் கோப்பை வரலாற்றுச் சாதனைகளைத் தவிடுபொடியாக்கிப் புதிய மைல்கல் படைத்துள்ளது.
இந்தத் தொடரின் தொடக்க ஆட்டங்கள் முதலே அணிகள் கோல்களை வாரிக்குவித்து வருகின்றன. இதன் தொடர்ச்சியாக, நேற்று நடைபெற்ற நெதர்லாந்து மற்றும் ஸ்வீடன் அணிகளுக்கு இடையிலான விறுவிறுப்பான லீக் ஆட்டத்தின் போது இந்த மைல்கல் எட்டப்பட்டது.
நெதர்லாந்து நாட்டின் நட்சத்திர முன்கள வீரரான கோடி காக்போ ஆட்டத்தின் போது அடித்த ஒரு கோல், இந்தத் தொடரின் ஒட்டுமொத்த 100-வது கோலாகப் பதிவானது. இதன் மூலம் வெறும் 33 போட்டிகளிலேயே 100 கோல்களை எட்டிய பெருமையை நடப்பு 2026 தொடர் பெற்றுள்ளது.

இதற்கு முன்னதாக, கடந்த 1958-ஆம் ஆண்டு நடைபெற்ற உலகக் கோப்பைக்குத் பிறகு, மிகக் குறைந்த போட்டிகளில் 100 கோல்கள் அடிக்கப்பட்டது இந்த 2026 தொடரில் தான் என்பது குறிப்பிடத்தக்கது.
உலகக் கோப்பை வரலாற்றில் மிக விரைவாக 100 கோல்கள் அடிக்கப்பட்ட சாதனை தற்போதும் 1954-ஆம் ஆண்டு சுவிட்சர்லாந்து உலகக் கோப்பைத் தொடரின் வசம் தான் உள்ளது. அந்தத் தொடரில் வெறும் 20 போட்டிகளிலேயே 100 கோல்கள் அடிக்கப்பட்டன. அதற்குப் பின் 1982 மற்றும் 2014-ஆம் ஆண்டுகளில் 36 போட்டிகளிலும், 1978 மற்றும் 1994-ஆம் ஆண்டுகளில் 38 போட்டிகளிலும் தான் 100 கோல்கள் எட்டப்பட்டன. தற்போது 33 போட்டிகளில் இந்த மைல்கல் எட்டப்பட்டதன் மூலம், கடந்த 68 ஆண்டுகளில் இல்லாத ஒரு மிகப்பெரிய கோல் வேட்டைத் தொடராக இது மாறியுள்ளது.
நடப்பு 2026 உலகக் கோப்பை கால்பந்து தொடரின் மிக முதல் கோலை, மெக்சிகோ நாட்டின் பிரபல வீரரான ஜூலியன் குய்னோனஸ் தனது முதல் லீக் ஆட்டத்தில் பதிவு செய்திருந்தார். இந்தத் தொடரில் இவ்வளவு வேகத்தில் கோல்கள் விழுவதற்குக் காரணங்களாகக் கால்பந்து வல்லுநர்கள் சில முக்கிய விபரங்களை அடுக்கிக் கூறுகின்றனர்.
இந்தத் தொடரில் பயன்படுத்தப்படும் அதிநவீன 'அடிடாஸ் ட்ரியோண்டா' கால்பந்து காற்றில் வேகத்தில் சுழன்று செல்வதால், அதனைத் தடுக்க முடியாமல் கோல்கீப்பர்கள் திணறி வருகின்றனர். மேலும், இந்த முறை 48 அணிகள் பங்கேற்கும் வகையில் தொடர் அசுர விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளதால், பல புதிய அணிகளுக்கு எதிராகப் பலம் வாய்ந்த அணிகள் கோல்களை அள்ளிக்குவித்து வருவதும் இந்த சாதனைக்கு முக்கியக் காரணமாகக் கருதப்படுகிறது.
