FIFA WC: நாக்-அவுட் சுற்றுக்கு முன்னேறிய ஈக்வடார்.. ஒருநாள் பொது விடுமுறை அறிவித்த அதிபர்!
வட அமெரிக்காவில் (அமெரிக்கா, மெக்சிகோ, கனடா) விறுவிறுப்பாக நடைபெற்று வரும் 23-வது ஃபிஃபா உலகக் கோப்பை கால்பந்து தொடரில், வலிமைமிக்க ஜெர்மனி அணியை வீழ்த்தி 20 ஆண்டுகளுக்குப் பிறகு ஈக்வடார் அணி நாக்-அவுட் சுற்றுக்குத் தகுதி பெற்று வரலாற்றுச் சாதனை படைத்துள்ளது. இந்த அசாத்திய வெற்றியைக் கொண்டாடும் விதமாக ஈக்வடார் நாட்டில் ஒருநாள் அரசுப் பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்காவின் நியூ ஜெர்சி மைதானத்தில் நேற்று நடைபெற்ற விறுவிறுப்பான 'இ' பிரிவுலீக் ஆட்டத்தில், உலகக் கோப்பையை 4 முறை வென்ற பலம் வாய்ந்த ஜெர்மனி அணியை ஈக்வடார் எதிர்கொண்டது. ஆட்டத்தின் தொடக்கம் முதலே இரு அணி வீரர்களும் கோல் அடிக்கக் கடுமையாகப் போராடினர். எனினும், ஆட்ட நேர முடிவில் ஈக்வடார் அணி 2-1 என்ற கோல் கணக்கில் ஜெர்மனியை வீழ்த்தி அதிரடி வெற்றி பெற்றது.

இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க வெற்றியின் மூலம், கடந்த 2006-ஆம் ஆண்டு உலகக் கோப்பைத் தொடருக்குப் பிறகு, சுமார் 20 ஆண்டுகள் கழித்து ஈக்வடார் அணி முதன்முறையாக உலகக் கோப்பையின் நாக்-அவுட் சுற்றுக்குத் தகுதி பெற்று அசத்தியுள்ளது.
ஈக்வடார் அணியின் இந்த அசாத்திய மற்றும் பிரம்மாண்ட வெற்றியைக் கொண்டாடும் விதமாக, நாட்டின் அதிபர் டேனியல் நோபோவா நள்ளிரவில் ஒரு முக்கிய உத்தரவைப் பிறப்பித்துள்ளார். உலகக் கோப்பையில் ஈக்வடார் கால்பந்து அணி செய்துள்ள இந்த வரலாற்றுச் சாதனையைப் பாராட்டும் விதமாகவும், ஒட்டுமொத்த நாட்டு மக்களும் இந்த உன்னதத் தருணத்தைக் கொண்டாட ஏதுவாகவும் நாட்டில் ஒருநாள் அரசுப் பொது விடுமுறை அறிவிக்கப்படுவதாக அதிபர் டேனியல் நோபோவா அதிகாரப்பூர்வமாகத் தெரிவித்துள்ளார்.

ஜூன் 11-ஆம் தேதி தொடங்கிய உலகின் மாபெரும் விளையாட்டுத் திருவிழாவான இந்த உலகக் கோப்பைத் தொடரில், கோப்பையைக் கைப்பற்றும் அணிகளில் ஒன்றாகக் கருதப்பட்ட ஜெர்மனியை, ஈக்வடார் அணி வீழ்த்தியிருப்பது உலகக் கால்பந்து ரசிகர்களிடையே பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. ஈக்வடார் நாட்டின் தலைநகர் கியூட்டோ உள்ளிட்ட அனைத்து நகரங்களிலும் பொதுமக்கள் மற்றும் கால்பந்து ரசிகர்கள் வீதிகளில் இறங்கிக் கொடிகளை அசைத்துக் தங்களது மகிழ்ச்சியைக் கொண்டாடி வருகின்றனர்.
