உலக கோப்பை கால்பந்து போட்டி: இன்று அனைத்து அரசு, தனியார் பள்ளி, கல்லூரிகளுக்கு, விடுமுறை - கேரளா அரசு அறிவிப்பு!

 
விடுமுறை

இன்று கேரளா மாநிலம் முழுவதும் அனைத்து அரசு  மற்றும் தனியார் பள்ளி, கல்லூரிகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவின் நியூஜெர்சியில் நேற்று நள்ளிரவு உலகக் கோப்பை கால்பந்து தொடரின் இறுதிப் போட்டி நடைபெற்ற நிலையில், கால்பந்து இறுதிப்போட்டியை மாணவர்களுக்கும் கண்டுகளிக்கும் விதமாக இந்த உத்தரவைக் கேரள முதலமைச்சர் வி.டி. சதீசன் பிறப்பித்துள்ளார்.

உலகக் கோப்பை கால்பந்து தொடரின் இறுதிப் போட்டியில் உலகின் முன்னணி மற்றும் பலம் வாய்ந்த அணிகளான அர்ஜென்டினாவும் ஸ்பெயினும் நேருக்கு நேர் மோதவுள்ளன. இரு அணிகளுமே உலகத்தரம் வாய்ந்த வீரர்கள் மற்றும் அசாத்திய பலத்துடன் விளங்குவதால், இந்த ஆண்டின் சாம்பியன் பட்டத்தை வெல்லப் போவது யார் என்பதைக் கணிப்பது கால்பந்து வல்லுநர்களுக்கே சவாலாக மாறியுள்ளது. சர்வதேச அளவில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இந்த இறுதியாட்டம், இந்திய நேரப்படி நேற்று நள்ளிரவு 12:30 மணிக்குத் தொடங்கியது.

FIFA கால்பந்து உலக கோப்பை

கேரள மாநிலத்தில் கால்பந்து விளையாட்டுக்கு எப்போதுமே பெரியளவில் வரவேற்பும், லட்சக்கணக்கான ரசிகர்களும் உள்ளனர். குறிப்பாக, நள்ளிரவில் தொடங்கிய இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க இறுதிப் போட்டியைக் காண்பதற்கு ஏதுவாகத் தங்களுக்கு விடுமுறை அளிக்க வேண்டும் என்று பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் சமூக வலைதளங்கள் வாயிலாகக் கேரள அரசுக்குத் தொடர்ந்து கோரிக்கைகளை விடுத்து வந்தனர்.

சுவிட்சர்லாந்து அர்ஜென்டினா கால்பந்து

மாணவர்களின் இந்தக் கோரிக்கைகள் இணையத்தில் மிக வேகமாகப் பரவி வைரலானதைத் தொடர்ந்து, கால்பந்து ரசிகர்கள் மற்றும் மாணவர்களின் நலனைக் கருத்தில் கொண்டு, இன்று ஒரு நாள் மட்டும் அனைத்து கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை அளிப்பதாகக் கேரள அரசு அறிவித்துள்ளது. அரசின் இந்த அறிவிப்பால் கேரளாவில் உள்ள மாணவர்கள் மிகுந்த உற்சாகத்துடன் நேற்று நள்ளிரவு கால்பந்து போட்டியைக் கண்டு ரசித்தனர்.