FIFA WC : ஜெர்மனியின் மரண வேட்டை... 7-1 கணக்கில் கியூரசாவை வாரிச் சுருட்டியது!

 
கால்பந்து ஜெர்மனி கால்பந்து ஜெர்மனி

அமெரிக்கா, மெக்சிகோ மற்றும் கனடா ஆகிய வட அமெரிக்க நாடுகளில் கோலாகலமாகத் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வரும் 23-வது ஃபிஃபா உலகக்கோப்பை கால்பந்து திருவிழாவில், குரூப் 'இ' பிரிவில் இடம் பெற்றுள்ள முன்னாள் உலக சாம்பியனான ஜெர்மனி அணி தங்களது அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி உலகக் கால்பந்து ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளனர். 

வாஷிங்டனில் நடைபெற்ற விறுவிறுப்பான லீக் ஆட்டத்தில், சர்வதேச கால்பந்து அரங்கில் ஜாம்பவானாகத் திகழும் ஜெர்மனி அணியை எதிர்த்து, கரீபியன் கடற்பகுதியில் அமைந்துள்ள மிகச் சிறிய தீவு நாடான கியூரசாவ் களம் கண்டது. ஆட்டம் தொடங்கிய 6-வது நிமிடத்திலேயே ஜெர்மனியின் நட்சத்திர வீரர் பெலிக்ஸ் நிமீச் மின்னல் வேகத்தில் ஒரு கோல் அடித்துத் தனது அணிக்கு 1-0 என முன்னிலை தேடித்தந்தார்.

ஆனால், தங்களை விடப் பல மடங்கு பலம் வாய்ந்த ஜெர்மனிக்குச் சற்றும் சளைக்காமல் பதிலடி கொடுத்த கியூரசாவ் அணியின் லிவனோ கமெனிசியா, ஆட்டத்தின் 21-வது நிமிடத்தில் மிரட்டலான ஒரு பீல்டு கோல் அடித்து ஒட்டுமொத்த மைதானத்தையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தினார். இதனால் ஆட்டம் 1-1 எனச் சமநிலையை எட்டியது.

கால்பந்து ஜெர்மனி

கியூரசாவ் அணி சமநிலை கோல் அடித்த அடுத்த விநாடியே ஆத்திரத்தின் உச்சத்துக்கே சென்ற ஜெர்மனி வீரர்கள் மைதானத்தில் ருத்ர தாண்டவமாடத் தொடங்கினர். கியூரசாவ் அணியின் தடுப்பு அரண்களைச் சுக்குநூறாக உடைத்தெறிந்து அடுத்தடுத்து கோல் மழையைப் பொழிந்தனர். ஜெர்மனி வீரர் நிகோ ஸ்காட்டர்பெக் 38-வது நிமிடத்திலும், கை ஹாட்வெர்ட்ஸ்  45-வது நிமிடத்திலும், ஜமால் முசியாலா 47-வது நிமிடத்திலும், நதானியேல் பிரவுன் 68-வது நிமிடத்திலும், டெனிஸ் உந்தாவ் 78-வது நிமிடத்திலும் கோல்களை வாரி இறைத்து எதிரணியை நிலைகுலைய வைத்தனர். ஆட்டத்தின் இறுதி கட்டத்தில் (88-வது நிமிடத்தில்) கை ஹாட்வெர்ட்ஸ் தனது 2-வது தனிநபர் கோலை அடித்து முத்திரையைப் பதித்தார்.

மறுபுறம், கியூரசாவ் வீரர்கள் கோல் அடிக்க எடுத்த அனைத்து முயற்சிகளையும் ஜெர்மனியின் இரும்புப் பின்கள வீரர்களும், கோல்கீப்பரும் சாமர்த்தியமாக முறியடித்தனர். இறுதியில், நிர்ணயிக்கப்பட்ட ஆட்ட நேர முடிவில் ஜெர்மனி அணி 7-1 என்ற பிரம்மாண்ட கோல் கணக்கில் கியூரசாவை மிக எளிதில் வீழ்த்தி, நடப்பு உலகக்கோப்பை தொடரில் தங்களது முதல் மெகா வெற்றியைப் பதிவு செய்துள்ளது.

கால்பந்து ஜெர்மனி

வெறும் 1.50 லட்சம் பேரை மட்டுமே ஒட்டுமொத்த மக்கள் தொகையாகக் கொண்ட கரீபியன் தீவு நாடான கியூரசாவ், உலகக்கோப்பை கால்பந்து வரலாற்றில் முதல்முறையாகத் தகுதிபெற்று உலக அரங்கில் தடம் பதித்துள்ளது. முதல் போட்டியிலேயே ஜெர்மனியிடம் படுதோல்வி அடைந்தாலும், முன்னாள் உலக சாம்பியனுக்கு எதிராக ஒரு கோல் அடித்து இந்தச் சிறிய நாடு உலகளவில் அனைவரின் பாராட்டுகளையும் பெற்று வருகிறது.