FIFA WC: உலக சாதனை நோக்கி மெஸ்சி... ஆஸ்திரியாவுடன் நாளை பலப்பரீட்சை!

 
மெஸ்ஸி

அமெரிக்காவின் கான்சாஸ் சிட்டி மைதானத்தில் நடைபெற்ற நடப்பு உலகக் கோப்பை கால்பந்து குரூப் 'ஜே' பிரிவின் தொடக்க ஆட்டத்தில், நடப்பு சாம்பியனான அர்ஜென்டினா அணி அல்ஜீரியாவை 3-0 என்ற கோல் கணக்கில் துவம்சம் செய்து வெற்றி பெற்றது. இப்போட்டியில் அர்ஜென்டினா கேப்டன் லயோனல் மெஸ்சி ஹாட்ரிக் கோல் அடித்து, சர்வதேச கால்பந்து வரலாற்றில் பல புதிய மைல்கற்களை எட்டியுள்ளார்.

இப்போட்டியின் 17, 60 மற்றும் 76-ஆவது நிமிடங்களில் மெஸ்சி அடித்த 3 கோல்களின் மூலம், உலகக் கோப்பையில் அவரது ஒட்டுமொத்த கோல்களின் எண்ணிக்கை 16 ஆக உயர்ந்தது. இதன் மூலம் ஜெர்மனியின் மிரோஸ்லாவ் குளோசின் வரலாற்றுச் சிறப்புமிக்க 16 கோல் சாதனையை மெஸ்சி அதிகாரப்பூர்வமாகச் சமன் செய்துள்ளார். பிரேசில் ஜாம்பவான் ரொனால்டோவின் (15 கோல்கள்) சாதனையை அவர் கடந்துள்ளார்.

மெஸ்ஸி கால்பந்து

தனது 200-ஆவது சர்வதேசப் போட்டியில் களம் கண்ட 38 வயதான மெஸ்சி, உலகக் கோப்பை வரலாற்றில் ஹாட்ரிக் கோல் அடித்த மிக வயதான வீரர் என்ற கிறிஸ்டியானோ ரொனால்டோவின் (2018 சாதனை) உலக சாதனையைத் தகர்த்தெறிந்துள்ளார். இப்போட்டியில் விளையாடியதன் மூலம், சர்வதேச கால்பந்து வரலாற்றில் 6 உலகக் கோப்பை தொடர்களில் விளையாடிய முதல் ஆண் கால்பந்து வீரர் என்ற சாதனையை மெஸ்சி தனதாக்கிக் கொண்டார்.

மெஸ்ஸி

அல்ஜீரியாவை வீழ்த்தி குரூப் பிரிவில் முதலிடத்தில் உள்ள அர்ஜென்டினா அணி, தங்களது அடுத்த லீக் ஆட்டத்தில் நாளை பலம் வாய்ந்த ஆஸ்திரியா அணியை எதிர்கொள்கிறது. நாளை நடக்கும் ஆஸ்திரியாவுக்கு எதிரான போட்டியில் மெஸ்சி மேலும் ஒரு கோல் அடிக்கும் பட்சத்தில், மிரோஸ்லாவ் குளோசின் சாதனையை முறியடித்து, உலகக் கோப்பை கால்பந்து வரலாற்றில் 'அதிக கோல்கள் அடித்த தனிப்பெரும் வீரர்' (17 கோல்கள்) என்ற புதிய உலக சாதனையைப் படைப்பார்.  இதனால் ஒட்டுமொத்த சர்வதேச கால்பந்து ரசிகர்களும் நாளை நடக்கும் ஆட்டத்தைக் காண அசுர ஆவலுடன் காத்திருக்கின்றனர்.