FIFA WC: உலகக் கோப்பைக்காக கடன் வாங்கும் மெக்சிகோ ரசிகர்கள்.. 62% பேர் வங்கிகளை நாடும் அதிர்ச்சிப் பின்னணி!

 
கால்பந்து மெக்ஸிக்கோ கால்பந்து மெக்ஸிக்கோ

அமெரிக்கா, மெக்சிகோ மற்றும் கனடா ஆகிய வட அமெரிக்க நாடுகளில் தற்போது 23-வது ஃபிஃபா உலகக் கோப்பை கால்பந்து போட்டிகள் மிக விறுவிறுப்பாகத் தொடங்கி நடைபெற்று வருகின்றன. மெக்சிகோவைப் பொறுத்தவரை, சுமார் 40 ஆண்டுகளுக்குப் பிறகு (கடந்த 1986-க்கு பின்) தங்கள் சொந்த மண்ணில் உலகக் கோப்பை ஆட்டங்கள் நடப்பதால், அங்குள்ள கால்பந்து ரசிகர்கள் மத்தியில் திருவிழா போன்றதொரு உற்சாகம் தொற்றிக் கொண்டுள்ளது.

இருப்பினும், இந்த வரலாற்றுச் சிறப்புமிக்கப் போட்டிகளை மைதானத்திற்கு நேரில் சென்று பார்ப்பதற்கான செலவுகள் விண்ணைத் தொடும் அளவிற்கு உயர்ந்துள்ளதால், நடுத்தர வர்க்கத்தைச் சேர்ந்த மெக்சிகோ ரசிகர்கள் கடுமையான நிதி நெருக்கடிக்கு ஆளாகியுள்ளனர்.

FIFA கால்பந்து உலக கோப்பை

'பிராவோ' என்ற சர்வதேசக் கடன் மேலாண்மை நிறுவனம் நடத்திய புதிய ஆய்வறிக்கையின்படி, மெக்சிகோ ரசிகர்கள் உலகக் கோப்பைக்கான நுழைவுச்சீட்டு, போக்குவரத்து, தங்குமிடம், உணவு மற்றும் இதர நினைவுப் பொருட்கள் ஆகியவற்றுக்காகச் சராசரியாக 30,000 முதல் 60,000 மெக்சிகன் பெசோக்கள் வரை செலவிட வேண்டியுள்ளது. இதன் இந்திய மதிப்பு தோராயமாக ரூ. 1.5 லட்சம் முதல் ரூ. 3.5 லட்சம் வரை ஆகும்.

கடந்த 2022-ஆம் ஆண்டு கத்தாரில் நடந்த உலகக் கோப்பையுடன் ஒப்பிடுகையில், இந்த முறை நுழைவுச்சீட்டுகளின் விலை சுமார் 584% வரை தாறுமாறாக உயர்ந்துள்ளதாகப் பொருளாதார வல்லுநர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். மெக்சிகோ சிட்டி ஸ்டேடியத்தில் நடந்த தொடக்க ஆட்டத்திற்கான சாதாரண இருக்கைகளின் விலையே பல மடங்கு அதிகமாக விற்கப்பட்டுள்ளது ரசிகர்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.

அதிகரித்து வரும் இந்தச் செலவுகளால், போட்டிகளை நேரில் காண விரும்பும் ரசிகர்கள் தங்களின் சொந்தப் பணத்தை விட, கடன் வாங்குவதையே முதன்மைத் தேர்வாகக் கொண்டுள்ளனர். இது குறித்து வெளியிடப்பட்டுள்ள கருத்துக்கணிப்பு புள்ளி விவரங்களின்படி, தங்களின் சொந்தப் பணம், வங்கி நடப்புக் கணக்கில் உள்ள இருப்பு அல்லது இதற்காக முன்கூட்டியே திட்டமிட்டுச் சேர்த்து வைத்திருந்த 'சொந்தச் சேமிப்பை' பயன்படுத்துகின்றனர்.

கால்பந்து ஜெர்மனி

62% ரசிகர்கள் உலகக் கோப்பையைக் காண்பதற்காக முழுமையாகக் கடனை மட்டுமே நம்பியுள்ளனர். 31% பேர் தங்களின் கிரெடிட் கார்டுகளைப் பயன்படுத்தி, அந்தத் தொகையை மாதத் தவணையாக மாற்றிச் செலுத்துகின்றனர். 25% பேர் கிரெடிட் கார்டுகள் மூலம் மொத்தத் தொகையையும் ஒரே முறையில் செலுத்திவிட்டு, அடுத்த மாத சம்பளம் வந்தவுடன் அதை முழுமையாக அடைக்கும் நோக்கில் டிக்கெட் வாங்கியுள்ளனர். 6% பேர் உலகக் கோப்பைச் செலவுகளுக்காக வங்கிகளில் நேரடியாகத் தனிநபர் கடன் வாங்கியுள்ளனர்.

மெக்சிகோவில் உள்ள சராசரி மக்களின் மாதச் சம்பளத்தை விட உலகக் கோப்பை டிக்கெட்டுகளின் விலை பல மடங்கு அதிகமாகும். இதனால், போட்டிகளைக் காணச் சென்றுள்ள ரசிகர்களில் 43% பேர் உலகக் கோப்பை முடிந்த பிறகு தாங்கள் கடுமையான கடன் வலையில் சிக்கப் போவதை இப்போதே ஒப்புக்கொண்டுள்ளனர்.

மேலும், போட்டிகளைக் காணச் சென்றுள்ள 55% மெக்சிகோ ரசிகர்கள், தங்கள் நாட்டின் ஆட்டங்களைத் தாண்டி அமெரிக்கா அல்லது கனடாவிற்குப் பயணம் செய்யத் திட்டமிட்டுள்ளதால், அவர்களின் கடன் சுமை மேலும் அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது. தங்களின் வாழ்நாளில் ஒருமுறையே வரும் இந்த வாய்ப்பைத் தவறவிடக் கூடாது என்பதற்காக, மெக்சிகோ மக்கள் தங்களின் எதிர்காலப் பொருளாதாரத்தைச் சூதாட்டமாக்கி மைதானங்களை நோக்கித் படையெடுத்து வருகின்றனர்.