FIFA WC: 70 வினாடிகளில் கோல் அடித்து மொராக்கோ வீரர் புதிய சாதனை!

 
மொராக்கோ இஸ்மாயில் சாய்பாரி கால்பந்து

அமெரிக்காவின் போஸ்டன் மைதானத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் பிபா உலகக் கோப்பை கால்பந்து தொடரின் 'சி' பிரிவு லீக் ஆட்டத்தில், ஸ்காட்லாந்து அணியை 1-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி மொராக்கோ அணி அபார வெற்றி பெற்றுள்ளது. இப்போட்டியின் மிக முக்கியச் சிறப்பம்சமாக, மொராக்கோ அணியின் நடுகள வீரரான இஸ்மாயில் சாய்பாரி ஆட்டம் தொடங்கிய சில வினாடிகளிலேயே கோல் அடித்து உலகக் கோப்பை வரலாற்றில் புதிய மைல்கல்லை எட்டியுள்ளார்.

போட்டி தொடங்கிய உடனே ஸ்காட்லாந்து அணியின் பின்கள தற்காப்பு அரணைத் தகர்த்துக் கொண்டு பந்தைக் கடத்திச் சென்ற இஸ்மாயில் சாய்பாரி, ஆட்டத்தின் 1 நிமிடம் 10 வினாடிகளிலேயே (சரியாக 70 வினாடிகள்) பந்தைப் கோல் வலைக்குள் திணித்து அசத்தினார்.

FIFA கால்பந்து உலக கோப்பை

ஆட்டத்தின் ஆரம்பத்திலேயே மொராக்கோ அணிக்குக் கிடைத்த இந்த 1-0 என்ற முன்னிலையை, போட்டி முடியும் வரை ஸ்காட்லாந்து அணியால் முறியடிக்க முடியவில்லை. இதனால் மொராக்கோ அணி தங்களது தகுதிக்கான மிக முக்கிய வெற்றியைப் பதிவு செய்தது.

இதற்கு முன்னதாக இந்த உலகக் கோப்பைத் தொடரில், செக்கியா நாட்டு வீரர் ஒருவர் ஆட்டம் தொடங்கிய 5 நிமிடங்கள் 10 வினாடிகளில் அடித்த கோலே அதிவேக கோலாகக் கருதப்பட்டது.

தற்பொழுது அந்தச் சாதனையைத் தவிடு பொடியாக்கியுள்ள மொராக்கோ வீரர் இஸ்மாயில் சாய்பாரி, வெறும் 70 வினாடிகளில் கோல் அடித்து, நடப்பு பிபா உலகக் கோப்பைத் தொடரின் 'அதிவேக கோல்' என்ற புதிய வரலாற்றுச் சாதனையைத் தனது தன்வசமாக்கியுள்ளார். உலகக் கோப்பை மேடையில் மொராக்கோ வீரரின் இந்த மின்னல் வேக ஒட்டுமொத்தக் கால்பந்து ரசிகர்களையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.