FIFA WC : நாக்-அவுட் சுற்றில் களமிறங்கும் நெய்மார் - பயிற்சியாளர் கார்லோ தகவல்!

 
நெய்மார்

பிஃபா உலகக் கோப்பை 2026  தொடரின் மிக முக்கியமான ரவுண்ட் ஆப் 16 க்-அவுட் சுற்றில், பலம் வாய்ந்த நார்வே அணியை பிரேசில் நாளை எதிர்கொள்கிறது. இப்போட்டிக்கு முன்னதாக பிரேசில் ரசிகர்களுக்கு மிகப்பெரிய மகிழ்ச்சி தரும் செய்தியாக, அந்த அணியின் நட்சத்திர வீரர் நெய்மார் காயம் நீங்கி முழு உடற்தகுதியுடன் மீண்டுள்ளதாகப் பயிற்சியாளர் கார்லோ அன்செலோட்டி உறுதிப்படுத்தியுள்ளார்.

கடந்த 2023-ஆம் ஆண்டு ஏற்பட்ட கடுமையான தசைநார் காயம் மற்றும் தொடர் ஃபிட்னஸ் பிரச்சினைகள் காரணமாக உலகக் கோப்பையின் குரூப் சுற்றுகளில் நெய்மார் முழுமையாக விளையாடவில்லை. ஜப்பானுக்கு எதிரான முந்தைய சுற்று ஆட்டத்தின் போது அவர் மாற்று வீரராக பெஞ்சில் அமர வைக்கப்பட்டிருந்தார்.

கால்பந்து நெய்மர்

இந்நிலையில், செய்தியாளர்களைச் சந்தித்த பிரேசில் அணியின் இத்தாலியத் தலைமைப் பயிற்சியாளர் கார்லோ அன்செலோட்டி கூறுகையில், "நெய்மார் தற்போது தனது முழுமையான உடற்தகுதியை எட்டியுள்ளார். அவர் நார்வேக்கு எதிரான போட்டியில் வெறும் மாற்று வீரராகப் பெஞ்சில் அமராமல், தொடக்க வீரராகக் களமிறங்கி 90 நிமிடங்களும் முழுமையாக விளையாட மிகுந்த ஆவலோடு இருக்கிறார். அவரது வருகை அணிக்கு மிகப்பெரிய உத்வேகத்தைத் தந்துள்ளது."

ஜப்பானுக்கு எதிராக 2-1 என்ற கணக்கில் கடின வெற்றி பெற்று நாக்-அவுட் சுற்றுக்கு முன்னேறிய பிரேசில் அணிக்கு, நார்வே ஒரு கடுமையான சவாலாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த உலகக் கோப்பை தொடரில் இதுவரை 5 கோல்களை அடித்து உக்கிரமான ஃபார்மில் இருக்கும் நார்வேயின் நட்சத்திர ஸ்ட்ரைக்கர் எர்லிங் ஹாலண்ட் தான் பிரேசிலுக்கு மிகப்பெரிய அச்சுறுத்தல் என அன்செலோட்டி மற்றும் பிரேசில் மிட்ஃபீல்டர் புரூனோ கிமரைஸ் ஆகியோர் ஒப்புக் கொண்டுள்ளனர்.

நெய்மர்

உலகக் கோப்பை வரலாற்றில் பிரேசில் அணி இதுவரை நார்வேயை வீழ்த்தியதே இல்லை (4 போட்டிகளில் 2 தோல்வி, 2 டிரா) என்ற மோசமான புள்ளிவிவரம் உள்ளது. 1998 உலகக் கோப்பையிலும் நார்வே 2-1 என பிரேசிலுக்கு அதிர்ச்சி தோல்வியளித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

எனினும், பிரேசில் அணியில் வினிசியஸ் ஜூனியர், கேப்ரியல் மார்ட்டினெல்லி ஆகியோருடன் தற்போது அனுபவ வீரர் நெய்மாரும் இணைந்திருப்பது, பிரேசில் அணியின் நாக்-அவுட் பலத்தை பல மடங்கு அதிகரித்துள்ளது. நியூயார்க் நியூ ஜெர்சி மைதானத்தில் நடைபெறவுள்ள இப்போட்டி உலகளாவிய கால்பந்து ரசிகர்கள் மத்தியில் உச்சக்கட்ட எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.