FIFA WC: நாக்-அவுட் சுற்றில் பரபரப்பு... ஒரே நாளில் அரங்கேறிய 2 விசித்திர சுய கோல்கள்; ஆட்டத்தின் போக்கையே மாற்றிய வீரர்கள்!

 
கால்பந்து

அமெரிக்கா, கனடா மற்றும் மெக்சிகோ ஆகிய நாடுகள் இணைந்து நடத்தி வரும் ஃபிபா உலகக்கோப்பை கால்பந்து தொடரின் லீக் சுற்று ஆட்டங்கள் முடிவடைந்து, தற்பொழுது நாக்-அவுட் சுற்று ஆட்டங்கள் மிக விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. தோற்றால் தொடரை விட்டு வெளியேற வேண்டும் என்ற நாக்-அவுட் சுற்றின் கடுமையான அழுத்தத்தின் காரணமாக, ஒரே நாளில் அடுத்தடுத்து இரண்டு முக்கிய ஆட்டங்களில் வீரர்கள் தங்களது சொந்த அணிக்கு எதிராவே கோல் (Own Goal) அடித்து ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளனர்.

நாக்-அவுட் சுற்றின் மிக முக்கிய ஆட்டம் ஒன்றில் ஆஸ்திரேலியா மற்றும் எகிப்துஆகிய அணிகள் பலப்பரீட்சை நடத்தின. ஆட்டத்தின் போது இரு அணிகளும் கோல் அடிக்கத் தீவிரமாகப் போராடிக் கொண்டிருந்த வேளையில், எகிப்து அணியின் தற்காப்பு வீரரான முகமது ஹானி, ஆஸ்திரேலிய அணியின் முன்களத் தாக்குதலைத் தடுக்க முயன்றார். ஆனால், பந்தை கிளியர் (Clear) செய்ய அவர் எடுத்த முயற்சி எதிர்பாராதவிதமாகத் தனது சொந்த அணியின் கோல் போஸ்ட்டிற்குள்ளேயே சென்று விழுந்தது. இதனால் ஆஸ்திரேலிய அணிக்கு மிக எளிதாக ஒரு புள்ளி பரிசாகக் கிடைத்தது.

இதேபோன்று நடைபெற்ற மற்றொரு த்ரில்லரான நாக்-அவுட் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் அர்ஜென்டினா மற்றும் கேப் வெர்தே  ஆகிய அணிகள் மோதின. அர்ஜென்டினா மற்றும் கேப் வெர்தே அணிகளுக்கு இடையிலான ஆட்டம் கூடுதல் நேரம் வரை நீடித்து 2-2 என்ற கணக்கில் சமநிலையில் நகர்ந்தது. அப்போது ஆட்டத்தின் 111-வது நிமிடத்தில், அர்ஜென்டினா வீரர்களின் தாக்குதலைத் தடுக்க முயன்ற கேப் வெர்தே அணியின் வீரர் டினே போர்ஜெஸ் மீது பந்து பட்டு துரதிர்ஷ்டவசமாக ஓன் கோலாக மாறியது. இந்த ஒரு சுய கோல் காரணமாக அர்ஜென்டினா 3-2 என்ற கணக்கில் த்ரில் வெற்றி பெற்று அடுத்த சுற்றுக்கு முன்னேறியது.

உலகக்கோப்பை போன்ற உலகளாவிய பிரம்மாண்ட தொடர்களின் நாக்-அவுட் சுற்றுகளில் ஒரே நாளில் இரண்டு ஆட்டங்களின் தலைவிதியை சுய கோல்கள் தீர்மானித்திருப்பது கால்பந்து வரலாற்றில் அரிதான ஒரு விசித்திர சாதனையாகப் பார்க்கப்படுகிறது.