FIFA WC: சவுதி அரேபியாவை 4-0 என பந்தாடி ஸ்பெயின் அபார வெற்றி!

 
கால்பந்து ஸ்பெயின்

அமெரிக்காவின் அட்லாண்டா மைதானத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் உலகக் கோப்பை கால்பந்து தொடரின் குரூப் 'எச்' பிரிவு லீக் ஆட்டத்தில், முன்னாள் உலகச் சாம்பியனான ஸ்பெயின் அணி தங்களது அசாத்திய ஆதிக்கத்தை வெளிப்படுத்தி சவுதி அரேபியாவை 4-0 என்ற கோல் கணக்கில் பந்தாடித் தங்களது முதல் வெற்றியைப் பதிவு செய்துள்ளது.

போட்டி தொடங்கிய 10-ஆவது நிமிடத்திலேயே ஸ்பெயினின் இளம் நட்சத்திர வீரர் லமைன் யமால், சக வீரர் மைக்கேல் ஒயர்சபால் அசிஸ்ட் செய்த பந்தைச் சரியாகப் பயன்படுத்தி முதல் கோலாக மாற்றினார். இதனால் ஸ்பெயின் 1-0 என முன்னிலை பெற்றது.

ஆட்டத்தின் 21-ஆவது நிமிடத்தில் ஏமெரிக் லபோர்டி அமைத்துக் கொடுத்த வாய்ப்பைப் பயன்படுத்தி மைக்கேல் ஒயர்சபால் ஸ்பெயினின் இரண்டாவது கோலை அடித்தார். அடுத்த சில நிமிடங்களிலேயே, அதாவது 24-ஆவது நிமிடத்தில் டேனி ஒல்மோ கொடுத்த பாஸை மீண்டும் கோலாக மாற்றி ஒயர்சபால் தனது தனிப்பட்ட 2-ஆவது கோலைப் பதிவு செய்தார். இதனால் ஆட்டத்தின் முதல் பாதியிலேயே ஸ்பெயின் அணி 3-0 என முன்னிலை பெற்றது. ஆட்டத்தின் இரண்டாவது பாதியிலும் சவுதி அரேபிய வீரர்களால் ஸ்பெயினின் தற்காப்பு அரணைத் தாண்ட முடியவில்லை.

ஆட்டத்தின் இரண்டாவது பாதி தொடங்கிய சில நிமிடங்களிலேயே, அதாவது 49-ஆவது நிமிடத்தில் சவுதி அரேபிய வீரர் ஹாசன் அல்டாம்பக்தி  பதற்றத்தில் தனது சொந்தக் கோல் போஸ்ட்டிலேயே பந்தை அடித்து ஸ்பெயினுக்குப் பரிசாக அளித்தார். இதன் மூலம் ஸ்பெயின் 4-0 என முன்னிலையைப் பலப்படுத்தியது.

ஆட்டத்தின் இறுதிவரை சவுதி அரேபியா அணியின் கோல் முயற்சிகள் எதற்கும் பலன் கிடைக்கவில்லை. தொடக்கம் முதல் இறுதி வரை ஆதிக்கம் செலுத்திய ஸ்பெயின், 4-0 என்ற கணக்கில் சவுதி அரேபியாவை வீழ்த்தி இந்த உலகக் கோப்பை தொடரில் தங்களது முதல் வெற்றியைப் பதிவு செய்துள்ளது. முன்னதாக இதே பிரிவில் நடந்த ஈரான் - பெல்ஜியம் இடையிலான ஆட்டம் டிரா ஆனதால், தற்பொழுது ஸ்பெயின் அணி குரூப் 'எச்' பிரிவில் புள்ளிப் பட்டியலில் முதலிடத்திற்கு முன்னேறியுள்ளது.