FIFA உலகக் கோப்பை இறுதிப் போட்டி.. நாளை கேரளா முழுவதும் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு!
அமெரிக்காவின் நியூஜெர்சியில் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் உலகக் கோப்பை கால்பந்து தொடரின் இறுதிப் போட்டியை முன்னிட்டு, கேரளா முழுவதும் நாளை பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அதிரடி உத்தரவைக் கேரள முதலமைச்சர் வி.டி. சதீசன் பிறப்பித்துள்ளார்.
உலகக் கோப்பை கால்பந்து தொடரின் இறுதிப் போட்டியில் உலகின் முன்னணி மற்றும் பலம் வாய்ந்த அணிகளான அர்ஜென்டினாவும் ஸ்பெயினும் நேருக்கு நேர் மோதவுள்ளன. இரு அணிகளுமே உலகத்தரம் வாய்ந்த வீரர்கள் மற்றும் அசாத்திய பலத்துடன் விளங்குவதால், இந்த ஆண்டின் சாம்பியன் பட்டத்தை வெல்லப் போவது யார் என்பதைக் கணிப்பது கால்பந்து வல்லுநர்களுக்கே சவாலாக மாறியுள்ளது. சர்வதேச அளவில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இந்த இறுதியாட்டம், இந்திய நேரப்படி இன்று நள்ளிரவு 12:30 மணிக்குத் தொடங்குகிறது.

கேரள மாநிலத்தில் கால்பந்து விளையாட்டுக்கு எப்போதுமே அசாத்திய வரவேற்பும், கோடிக்கணக்கான ரசிகர்களும் உள்ளனர். குறிப்பாக, நள்ளிரவில் தொடங்கும் இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க இறுதிப் போட்டியைக் காண்பதற்கு ஏதுவாகத் தங்களுக்கு விடுமுறை அளிக்க வேண்டும் என்று பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் சமூக வலைதளங்கள் வாயிலாகக் கேரள அரசுக்குத் தொடர்ந்து கோரிக்கைகளை விடுத்து வந்தனர்.

மாணவர்களின் இந்தக் கோரிக்கைகள் இணையத்தில் மிக வேகமாகப் பரவி வைரலானதைத் தொடர்ந்து, கால்பந்து ரசிகர்கள் மற்றும் மாணவர்களின் நலனைக் கருத்தில் கொண்டு, நாளை ஒரு நாள் மட்டும் கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை அளிப்பதாகக் கேரள அரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. அரசின் இந்த அறிவிப்பால் கேரளாவில் உள்ள கால்பந்து ரசிகர்கள் மற்றும் மாணவர்கள் மிகுந்த உற்சாகமடைந்துள்ளனர்.
