FIFA உலகக் கோப்பை: அமெரிக்காவில் நுழைய சோமாலியா நடுவருக்கு அனுமதி மறுப்பு - திருப்பி அனுப்பப்பட்டதால் பரபரப்பு!

 
கால்பந்து சோமாலியா நடுவர் கால்பந்து சோமாலியா நடுவர்

அமெரிக்கா, மெக்சிகோ மற்றும் கனடா ஆகிய நாடுகள் இணைந்து நடத்தும் 23-வது உலகக் கோப்பை கால்பந்து போட்டிகள் இன்று கோலாகலமாகத் தொடங்குகின்றன. இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க சர்வதேச கால்பந்து தொடருக்காக உலகெங்கிலும் இருந்து மொத்தம் 52 தகுதி வாய்ந்த சிறந்த போட்டி நடுவர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். அவர்களில் சோமாலியா நாட்டைச் சேர்ந்த ஓமர் ஆர்டன் என்பவரும் ஒருவர்.

கடந்த 2025-ம் ஆண்டில் ஆப்பிரிக்க கண்டத்தின் சிறந்த நடுவருக்கான உயரிய விருதைப் பெற்ற இவர், தன் நாட்டின் சார்பில் உலகக் கோப்பையில் பணியாற்றப் போகும் முதல் நடுவர் என்ற பெருமையைப் பெறும் கனவோடு அமெரிக்காவுக்குப் புறப்பட்டுச் சென்றார்.

FIFA கால்பந்து உலக கோப்பை

நடுவர் ஓமர் ஆர்டன் துருக்கியின் இஸ்தான்புல் நகரில் இருந்து விமானம் மூலமாக அமெரிக்காவின் மியாமி சர்வதேச விமான நிலையத்திற்குச் சென்றடைந்தார். அவரிடம் உலகக் கோப்பை போட்டிகளில் பங்கேற்பதற்கான முறையான விசா மற்றும் தேவையான அனைத்து பயண ஆவணங்களும் இருந்தன. இருந்த போதிலும், மியாமி விமான நிலையத்தில் இருந்த அமெரிக்கக் குடியுரிமை மற்றும் எல்லைப் பாதுகாப்புப் படையினர் அவரிடம் நீண்ட நேரம் கூடுதல் தீவிர பரிசோதனைகளை மேற்கொண்டனர். அந்தப் பரிசோதனைகளின் முடிவில், அவருக்கு அமெரிக்காவிற்குள் நுழைவதற்கான அனுமதியை அதிகாரிகள் திடீரென மறுத்து விட்டனர்.

அமெரிக்கப் பாதுகாப்புப் படையினரால் அனுமதி மறுக்கப்பட்ட சோமாலிய நடுவர் ஓமர் ஆர்டன், வந்த வழியிலேயே மீண்டும் துருக்கி நாட்டிற்கே திருப்பி அனுப்பி வைக்கப்பட்டார். உள்நாட்டுப் பாதுகாப்பு மற்றும் சோமாலியா நாட்டினர் தங்கள் நாட்டிற்குள் வருவதற்கு அமெரிக்க அரசு விதித்துள்ள கடுமையான பயணக் கட்டுப்பாடுகளே இந்த நடவடிக்கைக்கு முக்கியக் காரணமாகச் சொல்லப்படுகிறது.

கால்பந்து

இந்த விவகாரத்தில் சர்வதேச கால்பந்து சம்மேளனம் தலையிட முயன்ற போதும், போட்டியை நடத்தும் ஒரு நாட்டின் விசா நடைமுறைகள் மற்றும் குடியுரிமைச் சட்டங்களில் தாங்கள் எக்காரணம் கொண்டும் தலையிட முடியாது எனத் தெரிவித்து ஒதுங்கிக் கொண்டது கால்பந்து வட்டாரத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.