தவெக நிதியமைச்சர் மரிய வில்சன் நீதிமன்றத்தில் நேரில் ஆஜராக உத்தரவு!

 
மரிய வில்சன்

தவெக அமைச்சரவையின் நிதி மற்றும் திட்டமிடல் துறை அமைச்சர் என். மரிய வில்சனுக்கு எதிராகப் புதுச்சேரி நீதிமன்றம் கடுமையான உத்தரவைப் பிறப்பித்துள்ளது.

கடந்த 2022-ஆம் ஆண்டு குடும்பப் பிரச்சினை மற்றும் தொழில் போட்டி காரணமாகத் தனது சொந்தச் சகோதரர் மற்றும் அவரது மனைவியை வீடு புகுந்து தாக்கி, கொலை மிரட்டல் விடுத்ததாகத் தொடரப்பட்ட வழக்கில், தவெக நிதியமைச்சர் மரிய வில்சன் நாளை புதுச்சேரி நீதிமன்றத்தில் கட்டாயம் நேரில் ஆஜராக வேண்டும் என்று புதுச்சேரி முதலாவது குற்றவியல் நீதிமன்ற மாஜிஸ்திரேட்டு உத்தரவு பிறப்பித்துள்ளார்.

தவெக சார்பில் சென்னை ஆர்.கே. நகர் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்று,தமிழக நிதியமைச்சராக இருக்கும் மரிய வில்சன் மீதான இந்த வழக்கில், கடந்த 2022-ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில், புதுச்சேரி லாஸ்பேட்டை எழில் நகர் பகுதியில் வசித்து வரும் மரிய வில்சனின் உடன் பிறந்த சகோதரர் மரி க்ளோத் மற்றும் அவரது மனைவி கேரலின் ஆகியோரது வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்து, கட்டையால் தாக்கித் தவெக அமைச்சர் கொலை மிரட்டல் விடுத்ததாகக் கூறப்படுகிறது.

அமைச்சர் மரிய வில்சன் நிதியமைச்சர்

இந்தத் தாக்குதலில் காயமடைந்த தம்பதியினர் அளித்த புகாரின் பேரில், புதுச்சேரி லாஸ்பேட்டை போலீசார் மரிய வில்சன் மீது வீட்டிற்குள் அத்துமீறி நுழைதல், ஆபத்தான ஆயுதங்களால் காயம் ஏற்படுத்துதல், சொத்துக்களுக்குச் சேதம் விளைவித்தல், பெண்ணை அவமதித்தல் மற்றும் கொலை மிரட்டல் (IPC 506(i)) உள்ளிட்ட பல்வேறு கடுமையான பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்தனர்.

சமீபத்தில் நடந்த சட்டமன்றத் தேர்தல் பிரச்சாரத்தின் போது, மரிய வில்சன் ஆக்ரோஷமாகக் கட்டையுடன் தாக்குதல் நடத்தும் இந்தச் சம்பவத்தின் பழைய வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகிப் பெரும் பரபரப்பைக் கிளப்பியது குறிப்பிடத்தக்கது. இந்த வழக்கு புதுச்சேரி முதலாவது குற்றவியல் நீதிமன்றத்தில் கடந்த சில வருடங்களாக விசாரணையில் இருந்து வருகிறது.

இந்த விவகாரத்தில் நீதிமன்றம் பலமுறை சம்மன் அனுப்பி, வாய்தாக்கள் வழங்கப்பட்ட போதிலும், அமைச்சராகப் பொறுப்பேற்றுள்ள மரிய வில்சன் தொடர்ந்து நீதிமன்றத்தில் ஆஜராகாமல் தவிர்த்து வந்தார். இதனால் அதிருப்தியடைந்த நீதிபதி, தற்போதைய பதவிகளைக் காரணம் காட்டி வழக்கை மேலும் தாமதப்படுத்தக் கூடாது என்றும், நாளை நடைபெறும் விசாரணையின் போது அமைச்சர் மரிய வில்சன் எவ்விதக் காரணமுமின்றி நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகித் தனது விளக்கத்தை அளிக்க வேண்டும் என்றும் இறுதி உத்தரவைப் பிறப்பித்துள்ளார்.