3-வது குழந்தை பெற்றால் மாதந்தோறும் ரூ.10,000 நிதியுதவி.. அரசு வெளியிட்ட அதிரடி அறிவிப்பு - எங்கே தெரியுமா?

 
குழந்தை குழந்தை

மக்கள் தொகையை அதிகரிக்கும் நோக்கில், ஒரு குடும்பத்தில் பிறக்கும் மூன்றாவது மற்றும் அதற்கு அடுத்ததாகப் பிறக்கும் குழந்தைகளுக்கு மாதந்தோறும் ரூ.10,000 நிதியுதவி வழங்கப்படும் என பூடான் அரசு வரலாற்றுச் சிறப்புமிக்க திட்டத்தை அறிவித்துள்ளது.

இந்தியாவின் அண்டை நாடான பூடானில், சமீப காலமாகப் பிறப்பு விகிதம் மிகக் கடுமையான வீழ்ச்சியைச் சந்தித்து வருகிறது. இதனால் நாட்டில் இளைஞர்களின் எண்ணிக்கை குறைந்து, முதியவர்களின் எண்ணிக்கை கணிசமாக அதிகரிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

குழந்தை பிரசவம்

இதற்கிடையே, பூடானில் போதிய வேலைவாய்ப்புகள் இல்லாத சூழலால், அங்குள்ள படித்த இளம் தலைமுறையினர் பலர் வாழ்வாதாரம் தேடி ஆஸ்திரேலியா, கனடா போன்ற வெளிநாடுகளுக்குக் குடிபெயர்ந்து வருகின்றனர். இந்த இரட்டைப் பாதிப்பால் நாட்டின் எதிர்காலமே கேள்விக்குறியாகும் நிலை உருவானதை அடுத்து, பூடான் அரசு இந்த அதிரடி முடிவை எடுத்துள்ளது.

மக்கள்தொகைச் சரிவைத் தடுத்து நிறுத்தி, குழந்தைப் பிறப்பை ஊக்குவிப்பதற்காகப் பூடான் அரசாங்கம் '3-வது குழந்தை பிளஸ்' என்ற புதிய புரட்சிகரமான திட்டத்தைத் தொடங்கியுள்ளது. இந்தத் திட்டத்தின் கீழ், தகுதியுள்ள குடும்பங்களின் மூன்றாவது மற்றும் அதற்கு மேல் பிறக்கும் ஒவ்வொரு குழந்தைகளுக்கும், மாதந்தோறும் 10,000 நல்ட்ரம் (பூடான் நாணயம் - இது இந்திய ரூபாய் மதிப்பில் சுமார் ரூ.10,000 ஆகும்) நிதியுதவியாக நேரடியாகப் பெற்றோரின் கணக்கில் செலுத்தப்படும்.

குழந்தை வாயில் டேப்

பூடான் அரசின் இந்த நிபந்தனையின்படி ஒரு குழந்தைக்கு 3 வயது (36 மாதங்கள்) ஆகும் வரை இந்த நிதியுதவி தங்குதடையின்றி மாதந்தோறும் வழங்கப்படும். இதன் மூலம் ஒரு குழந்தைக்கு மொத்தமாக 3 லட்சத்து 60 ஆயிரம் நல்ட்ரம் (ரூ.3.60 லட்சம்) ஊக்கத்தொகையாகக் கிடைக்கும்.

இந்த சலுகையானது கண்டிப்பாக ஒரு குடும்பத்தின் மூன்றாவது மற்றும் அதற்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு மட்டுமே பொருந்தும். முதல் இரு குழந்தைகளுக்கு இது பொருந்தாது எனத் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது. வளர்ந்த நாடுகள் பலவும் மக்கள் தொகைக் குறைபாட்டைச் சந்தித்து வரும் வேளையில், அண்டை நாடான பூடான் அரசு, குழந்தைப் பிறப்பை அதிகரிக்கப் பணத்தை அள்ளி வீசும் இந்த 'பம்பர்' திட்டம் உலக நாடுகள் மத்தியில் பெரும் கவனத்தைப் பெற்றுள்ளது.