வாடிக்கையாளர்களின் நகைகளை மறுஅடகு வைத்த நிதி நிறுவன மேலாளர் கைது!

 
அடகு

நெல்லை தச்சநல்லூரில் இயங்கி வரும் பிரபல தனியார் நிதி நிறுவனத்தில், வாடிக்கையாளர்களுக்குத் தெரியாமல் நகைகளை மறுஅடகு வைத்தும் போலிக் கணக்குகளைத் தொடங்கியும் ரூ.22 லட்சத்திற்கும் அதிகமாக நிதி மோசடியில் ஈடுபட்ட கிளை மேலாளரைக் குற்றப்பிரிவு காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.

தச்சநல்லூர் கிளையில் நடைபெற்ற வழக்கமான தணிக்கையின் போது, கணக்குகள் மற்றும் அடகு வைக்கப்பட்ட நகைகளின் ஆவணங்களை அதிகாரிகள் தீவிரமாகச் சரிபார்த்தனர். அப்போது பல லட்ச ரூபாய் அளவில் நிதி முறைகேடுகள் நடந்திருப்பது வெளிச்சத்திற்கு வந்தது.

இதையடுத்து, நிறுவனத்தின் மண்டல மேலாளர் அழகுராஜன் அளித் புகாரின் பேரில் நெல்லை மாநகரக் குற்றப்பிரிவு காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

நகைக்கடன் தங்கம்

காவல்துறையினர் நடத்திய விசாரணையில், தென்காசி மாவட்டத்தைச் சேர்ந்த கிளையின் முன்னாள் மேலாளர் காளிதாஸ் (38) என்பவரே இந்தத் தொடர் முறைகேடுகளின் பின்னணியில் செயல்பட்டது தெரியவந்தது. தனக்குக் கீழ் பணியாற்றிய ஊழியர்களை மிரட்டித் தனது கட்டுப்பாட்டில் வைத்துக்கொண்டு இவர் பல வழிகளில் மோசடி செய்துள்ளார்:

வாடிக்கையாளர்கள் தரும் நகைகளை அவர்களின் பெயரில் பதிவு செய்யாமல், வேறு நபர்களின் பெயர்களில் போலியாகப் பதிவு செய்து கூடுதல் தொகையைக் கையாடல் செய்தார். வாடிக்கையாளர்களுக்குத் தெரியாமல் அவர்களின் நகைகளை அதிகத் தொகைக்கு மறுஅடமானம் வைத்து பணத்தைச் சுருட்டினார்.

நகைக்கடன் தங்கம்

நகைகளின் எடையைக் கூடுதலாகக் காட்டியும், கற்களின் எடையைக் கழிக்காமல் கணக்கு எழுதியும் நிறுவனத்திற்கு ரூ.22 லட்சம் வரை நிதி இழப்பை ஏற்படுத்தியுள்ளார். விசாரணையில் காளிதாஸ் மீதான குற்றச்சாட்டுகள் ஆதாரங்களுடன் உறுதி செய்யப்பட்டதைத் தொடர்ந்து, நெல்லை மாநகரக் குற்றப்பிரிவு போலீசார் அவரைக் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திச் சிறையில் அடைத்தனர். வாடிக்கையாளர்களின் நம்பிக்கையைப் முதலாகக் கொண்டு இயங்கும் நிதி நிறுவனத்திலேயே மேலாளரே நிலுவையில் உள்ள நகைகளை வைத்து மோசடியில் ஈடுபட்டது நெல்லை பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.