ஜார்க்கண்ட் தேர்வு முறைகேடு போராட்ட வழக்கில் 900 மாணவர்கள் மீது எஃப்.ஐ.ஆர் பதிவு!

 
தேர்வில் முறைகேடு டெல்லி ஜார்க்கண்ட் மாணவர்கள் போராட்டம் தடியடி

ஜார்க்கண்ட் மாநிலத்தில் அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்திய தேர்வில் முறைகேடு நடந்ததாகக் கூறி, மாணவர்கள் நடத்திய போராட்டம் வன்முறையாக மாறியதைத் தொடர்ந்து 900 அடையாளம் தெரியாத நபர்கள் மற்றும் 28 பேர் மீது காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

ஜே.எஸ்.எஸ்.சி.-சி.ஜி.எல். தேர்வில் முறைகேடு நடந்துள்ளதாகக் கூறி, தேர்வு நடைமுறையில் சீர்திருத்தம் கோரி மாணவர்கள் கடந்த 24 நாட்களாகப் போராட்டம் நடத்தி வந்தனர். இதில் 16 நாட்கள் தொடர் உண்ணாவிரதப் போராட்டமும் அடங்கும்.

நீட் ஜார்க்கண்ட்

மாணவர்களின் போராட்டத்தைத் தொடர்ந்து, முதலமைச்சர் ஹேமந்த் சோரன் அந்த அரசுப் பணி நியமனத் தேர்வையும், தொடர்புடைய டேட்டா புராசஸிங் நிறுவனத்தின் தேர்வுகளையும் ரத்து செய்து உத்தரவிட்டார்.

தேர்வு ரத்து தொடர்பான அரசின் சில அறிவிப்புகளுக்கு அம்மாநில உயர் நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்தது. இதனால் ஆத்திரமடைந்த மாணவர்கள், அரசு தங்களை ஏமாற்றிவிட்டதாகக் கூறி மீண்டும் வீதியில் இறங்கிப் போராடினர்.

ஜார்க்கண்ட்

கிரிதி மற்றும் ஹசாரிபாக் ஆகிய நகரங்களில் திரண்ட ஆயிரக்கணக்கான மாணவர்கள், முதல்வர் ஹேமந்த் சோரனின் உருவப்பொம்மையை எரிக்க முயன்றதுடன் போக்குவரத்தையும் முடக்கினர். அப்போது மாணவர்களுக்கும் காவல்துறையினருக்கும் இடையே கடுமையான மோதல் ஏற்பட்டது. இக்கலவரத்தில் 4 காவல் நிலையங்களைச் சேர்ந்த 4 சப்-இன்ஸ்பெக்டர்கள் உட்பட மொத்தம் 8 காவல்துறையினர் காயமடைந்தனர்.

அரசுப் பணிக்கு இடையூறு விளைவித்தல் மற்றும் காவல்துறையினரைத் தாக்கியது ஆகிய பிரிவுகளின் கீழ் 3 எஃப்.ஐ.ஆர்.கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதில் 28 பேரின் பெயர்கள் நேரடியாகச் சேர்க்கப்பட்டுள்ளதுடன், அடையாளம் தெரியாத 900 பேர் மீதும் வழக்கு தொடரப்பட்டுள்ளது. மாணவர்கள் மீதான எஃப்.ஐ.ஆர்.களை உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும் என்றும், இல்லையெனில் மாநிலம் தழுவிய அளவில் 'சிறை நிரப்பும் போராட்டம்' நடத்தப்படும் என்றும் எதிர்க்கட்சித் தலைவர் பாபுலால் மராண்டி எச்சரிக்கை விடுத்துள்ளார்.