நடுவானில் விமான என்ஜினில் தீ விபத்து; விமானியின் சாதுரியத்தால் 146 பயணிகள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்!

 
விமானம் தீ

பிலிப்பைன்ஸ் வான்பரப்பில் ஏர் நியூ கினி நிறுவனத்திற்குச் சொந்தமான போயிங் 767 ரகப் பயணிகள் விமானம் பறந்து கொண்டிருந்தபோது, அதன் என்ஜினில் திடீரெனத் தீ பற்றியதால் நடுவானில் பெரும் பரபரப்பும் பதற்றமும் ஏற்பட்டது. இருப்பினும், விமானி சாதுரியமாகச் செயல்பட்டு விமானத்தை உடனடியாக அவசரமாகத் தரையிறக்கியதால், விமானத்திலிருந்த 146 பயணிகளும் எவ்வித உயிர்ச்சேதமும் இன்றி அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.

ஏர் நியூ கினி விமான நிறுவனத்திற்குச் சொந்தமான போயிங் 767 ரக விமானம், 146 பயணிகளுடன் பிலிப்பைன்ஸ் வான்பரப்பில் பறந்து கொண்டிருந்தது. அப்போது விமானத்தின் என்ஜினில் திடீரெனத் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டுத் தீப்பற்றியது.

நடுவானில் விமானத்தின் என்ஜினில் தீ பிடித்ததை அறிந்ததும் விமானத்திற்குள் இருந்த பயணிகளிடையே கடும் அச்சமும் பதற்றமும் நிலவியது. விமானப் பணிப்பெண்கள் பயணிகளை அமைதிப்படுத்திப் பாதுகாப்பு வழிமுறைகளைப் பின்பற்றுமாறு அறிவுறுத்தினர். ஆபத்தை உணர்ந்த விமானி உடனடியாக விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டு அறைக்குத் தகவல் தெரிவித்து, விமானத்தை அருகிலுள்ள விமான நிலையத்தில் அவசரமாகத் தரையிறக்க அனுமதி பெற்றார். பின்னர் மிகுந்த சாதுரியத்துடன் விமானத்தைப் பாதுகாப்பாக ஓடுபாதையில் தரையிறக்கினார்.

அவசரத் தரையிறக்கத்தின் போது விமானத்தின் வேகத்தைக் கட்டுப்படுத்தப் பிரேக்குகள் அதிகளவில் பயன்படுத்தப்பட்டதால், அவை கடும் வெப்பமடைந்தன. இதன் காரணமாக விமானத்தின் வலது பக்கத்திலுள்ள 4 டயர்கள் வெடித்துச் சேதமடைந்தன. எனினும், விமானம் ஓடுபாதையை விட்டு விலகாமல் பாதுகாப்பாக நிறுத்தப்பட்டது.

விமானம் தரையிறங்கியதும் அவசரக்கால மீட்புக் குழுவினர் மற்றும் தீயணைப்பு வீரர்கள் விரைந்து செயல்பட்டு தீயைக் கட்டுப்படுத்தினர். விமானத்திலிருந்த 146 பயணிகளும் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டனர். யாருக்கும் பெரிய அளவிலான காயங்கள் ஏற்படவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நடுவானில் போயிங் 767 விமானத்தின் என்ஜினில் தீ பிடித்ததற்கான துல்லியமான காரணம் குறித்து விமானப் போக்குவரத்துத் துறை அதிகாரிகள் மற்றும் பொறியாளர்கள் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். விமானியின் சரியான நேரத்திலான முடிவால் மிகப்பெரிய விமான விபத்து தவிர்க்கப்பட்டுள்ளது.