டெல்லி விடுதி தீ விபத்தில் பலி எண்ணிக்கை 22 ஆக உயர்வு!
தெற்கு டெல்லியின் மாளவியா நகர் பகுதியில் உள்ள ஒரு தனியார் விடுதியில் கடந்த புதன்கிழமை அதிகாலை ஒரு பயங்கரமான தீ விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் சிக்கி படுகாயம் அடைந்த நைஜீரிய நாட்டைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு இருந்தார். நேற்று நள்ளிரவு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

கடந்த புதன்கிழமை ஹவுஸ் ராணி பகுதியில் உள்ள விடுதியில் ஏற்பட்ட இந்த கோர விபத்தில் 16 வயது சிறுமி சம்பவ இடத்திலேயே பலியானார். மேலும் கிர்கிஸ்தான், நைஜீரியா, வங்கதேசம், ஈராக், காங்கோ உள்ளிட்ட பல்வேறு நாடுகளைச் சேர்ந்த வெளிநாட்டினர் உட்பட 21 பேர் ஏற்கனவே உயிரிழந்துள்ளனர். தற்பொழுது மேலும் ஒரு வெளிநாட்டு இளைஞர் உயிரிழந்ததை அடுத்து மொத்த பலி எண்ணிக்கை 22 ஆக உயர்ந்துள்ளதாகக் காவல்துறை தெரிவித்துள்ளது.

உயிரிழந்த நைஜீரிய இளைஞர் ஒகாலே என்று அடையாளம் காணப்பட்டுள்ளார். தீ விபத்தில் கடுமையான தீக்காயங்களுக்கு உள்ளான அவர், நிலைமை மோசமடைந்ததால் தீவிர சிகிச்சை பிரிவுக்கு மாற்றப்பட்டுச் செயற்கை சுவாசக் கருவி மூலம் கண்காணிக்கப்பட்டு வந்தார். டெல்லி காவல்துறையினர் அவரது உடலைக் கைப்பற்றிப் பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
