அல்ஜீரியா காப்பகத்தில் பயங்கர தீ விபத்து.. 11 குழந்தைகள் உயிரிழப்பு!
வடக்கு ஆப்பிரிக்க நாடான அல்ஜீரியாவின் தலைநகர் அல்ஜியர்ஸில் இயங்கி வரும் ஆதரவற்ற குழந்தைகள் காப்பகம் ஒன்றில், இன்று அதிகாலையில் எதிர்பாராத விதமாகப் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இந்தத் துயரமான சம்பவத்தில் காப்பகத்தில் தங்கியிருந்த 11 பிஞ்சு குழந்தைகள் தீயில் கருகி பரிதாபமாக உயிரிழந்தனர்.
தீ விபத்து ஏற்பட்ட காப்பகக் கட்டடத்தில் ஏராளமான ஆதரவற்ற குழந்தைகள் தங்கிப் படித்து வந்துள்ளனர். கோடை வெப்பம் காரணமாகக் காப்பகத்தில் உள்ள குளிரூட்டி தொடர்ந்து இயங்கிக் கொண்டிருந்ததாகத் தெரிகிறது. இந்நிலையில், எதிர்பாராத விதமாக அந்த ஏசி சாதனத்தில் ஏற்பட்ட மின்கசிவு காரணமாகப் பயங்கரத் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. கசிந்த தீப்பொறி அங்கிருந்த பொருட்கள் மீது பட்டு, அடுத்த சில நிமிடங்களிலேயே ஒட்டுமொத்தக் கட்டடத்திற்கும் மளமளவெனப் பரவியது. குழந்தைகள் உறங்கிக் கொண்டிருந்த நேரத்தில் தீ பரவியதால், அவர்களால் உடனடியாக வெளியேற முடியாமல் போனதாகக் கூறப்படுகிறது.
தீ விபத்து குறித்துத் தகவல் அறிந்ததும் சம்பவ இடத்திற்கு அல்ஜீரிய நாட்டு மீட்புக் குழுவினர் மற்றும் தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்தனர். அவர்கள் கட்டடத்தின் உள்ளே புகுந்து, சுற்றிலும் பரவியிருந்த அடர்ந்த புகைக்கு நடுவே சிக்கியிருந்த குழந்தைகளைப் பத்திரமாக மீட்கும் பணியில் ஈடுபட்டனர்.
இருப்பினும், இந்த விபத்தில் 11 குழந்தைகள் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும், தீக்காயங்கள் மற்றும் மூச்சுத்திணறலால் பாதிக்கப்பட்ட 19 குழந்தைகள் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு, சிகிச்சைக்காக அருகில் உள்ள மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இச்சம்பவம் குறித்து அல்ஜியர்ஸ் நகரப் போலீசார் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
