திருப்பூரில் பனியன் குடோனில் பயங்கர தீ விபத்து - பல லட்சம் ரூபாய் பொருட்கள் சேதம்!

 
பனியன் தீவிபத்து குடோன்

திருப்பூர் சின்னபொம்மநாயக்கன்பாளையம் பகுதியில் உள்ள பனியன் வேஸ்ட் சேமிப்புக் கிடங்கில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தில் பல லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்கள் தீக்கிரையாகின.

சின்னபொம்மநாயக்கன்பாளையத்தில் உள்ள ஒரு குடோனில் தொடங்கிய தீ, காற்றின் வேகம் அதிகமாக இருந்ததால் அடுத்தடுத்து இருந்த 6-க்கும் மேற்பட்ட குடோன்களுக்குச் சட்டென்று பரவியது.

குடோன்களில் அதிகளவில் பனியன் வேஸ்ட் துணிகளும், பழைய அட்டைகளும் பதுக்கி வைக்கப்பட்டிருந்ததால் தீ கொழுந்துவிட்டு எரிந்து அப்பகுதி முழுவதையும் கரும்புகை சூழ்ந்தது.

தகவல் அறிந்து விரைந்து வந்த திருப்பூர் வடக்கு மற்றும் தெற்கு தீயணைப்பு நிலையங்களைச் சேர்ந்த 3 தீயணைப்பு வாகனங்கள் மற்றும் 10-க்கும் மேற்பட்ட தண்ணீர் லாரிகள் மூலம் ஒரு மணி நேரத்திற்கும் மேலாகப் போராடித் தீயைக் கட்டுக்குள் கொண்டுவந்தனர்.

பலத்த காற்றின் காரணமாகத் தீயைக் கட்டுப்படுத்துவதில் கடும் சிரமம் ஏற்பட்டது. இந்த விபத்தில் நல்வாய்ப்பாக உயிர்ச்சேதம் ஏதும் ஏற்படவில்லை என்றாலும், பல லட்சம் ரூபாய் மதிப்பிலான பனியன் கழிவுகள் மற்றும் பொருட்கள் எரிந்து சேதமடைந்துள்ளன. விபத்துக்கான காரணம் குறித்துப் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.