விருதுநகரில் தீப்பெட்டி ஆலையில் பயங்கர தீ விபத்து... ரூ.23 லட்சம் மதிப்பில் சேதம்!

 
விருதுநகர்

விருதுநகர் மாவட்டத்தில் நேற்றிரவு தீப்பெட்டி ஆலை ஒன்றில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டதில் ஆலையில் வைக்கப்பட்டிருந்த சுமார் 400 மூட்டை தீக்குச்சிகள் எரிந்து சாம்பலானது. இயந்திரங்களும் தீ விபத்தில் சேதமடைந்த நிலையில், சுமார் ரூ.23 லட்சம் மதிப்பிலான பொருட்கள் சேதமடைந்ததாக கூறப்படுகிறது. 

சிவகாசி கார்னேசன் காலனியைச் சேர்ந்தவர் ஹரிராம் சுந்தரவேல் (50). இவருக்குச் சொந்தமான தீப்பெட்டி ஆலை விருதுநகர் அல்லம்பட்டியில் குல்லூர்சந்தை சாலையில் இயங்கி வருகிறது. இந்நிலையில் நேற்றிரவு தீபாவளியையொட்டி சிறுவர்கள் பட்டாசு வெடித்துக் கொண்டாடிய நிலையில் தீப்பெட்டி ஆலையின் ஜன்னல் வழியாக பட்டாசு வெடிப்பில் இருந்து கிளம்பிய தீப்பொறி விழுந்து தீப்பற்றியதாக தெரிய வந்துள்ளது.

விருதுநகர்

400 மூட்டைகளில் தீக்குச்சிகள் வைக்கப்பட்டிருந்த நிலையில் உடனடியாக தீப்பற்றியதால் தீ வேகமாக ஆலை முழுவதும் பரவி கொளுந்து விட்டு எரிய துவங்கியது. 

தீ விபத்து குறித்து தகவலறிந்த விருதுநகர் தீயணைப்பு வீரர்கள் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சுமார் 2 மணி நேரம் போராடி தீயை அணைத்து கட்டுக்குள் கொண்டு வந்தனர். இந்த தீ விபத்தில் ஆலையிலிருந்த சுமார் ரூ.13 லட்சம் மதிப்பிலான 400 மூட்டை தீக்குச்சிகள் சாம்பலானதோடு, ரூ.10 லட்சம் மதிப்பிலான இயந்திரங்களும் தீயில் எரிந்து சேதமடைந்தன. 

தீ விபத்து குறித்து விருதுநகர் கிழக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.